அம்பாளுடன் அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி


அம்பாளுடன் அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
x

இந்த ஆலயத்தில் குருவின் அம்சமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, அம்பிகையை அணைத்தவாறு வேறு எங்கும் காண முடியாத கோலத்தில் காட்சியளிக்கிறார்.

தட்சிணாமூர்த்திக்கான சிறப்புமிக்க ஆலயங்களில், ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி என்ற இடத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலும் ஒன்று. குருபகவானைத் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் முக்கியமான தலம் ஆகும். சுருட்டப்பள்ளி ஆலயம் பல்வேறு வகைகளில் பிரசித்தி பெற்றது.

இந்த ஆலயத்தை 'பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயம்' என்றும் அழைப்பார்கள். இங்கு ஆலகால விஷத்தை உண்ட ஈசன், விஷத்தின் வீரியத்தால் ஏற்பட்ட மயக்கம் காரணமாக அம்பாளின் மடியில் தலைவைத்தவாறு காட்சியளிக்கிறார். சிவபெருமான் பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து சயனித்திருப்பது போன்ற அரிய திருவுருவத்தைக் கருவறையில் கொண்ட ஆலயம் இது. இறைவன் சுருண்டு பள்ளிகொண்டதால் சுருட்டப்பள்ளி என்ற பெயர் பெற்றதாம்.

திருமாலை மட்டுமே பள்ளிகொண்ட நிலையில் 108 திவ்ய தேசங்களிலும், பிற வைணவ ஆயலங்களிலும் தரிசிக்க முடியும். ஆனால் சிவபெருமான் பள்ளிகொண்டு பள்ளிகொண்டீசராகக் காட்சி தரும் ஒரே தலம் இந்தியாவில் சுருட்டப்பள்ளிதான்.

இந்த ஆலயத்தில் குருவின் அம்சமாக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, அம்பிகையை அணைத்தவாறு வேறு எங்கும் காண முடியாத கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை, 'போக தட்சிணாமூர்த்தி' என்றும், 'தாம்பத்ய தட்சிணாமூர்த்தி' என்றும் சொல்கிறார்கள். இவர் வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை குத்திட்ட நிலையில் வைத்து, யோக தரிசனம் தருகிறார். கரங்கள் மான், மழு தாங்கிய நிலையில் இவரது கோலம் எழில்மிக்கது. போக நிலையில் 'சக்தி தட்சிணாமூர்த்தியாக விளங்கும் இவரிடம் திருமண வரம் கேட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. குருவருளைப் பெற்று திருமண வேண்டுதல்கள் நிறைவேற சுருட்டப்பள்ளி சென்று தட்சிணாமூர்த்தியை வணங்கி அருள்பெறலாம்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு... https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story