சக்தி வாய்ந்த சிவ மந்திரங்கள்
படைப்பதற்கு, காப்பதற்கு என்று தனித்தனியாக தெய்வங்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் தனக்குள் அடக்கியிருப்பவர், சிவ பெருமான். அவரே இந்த பிரபஞ்சத்தின் மூலாதாரம். இரக்கத்தின், அன்பின் வடிவமாக இருப்பவா்.
அழித்தல் தொழிலை ஏற்று செய்பவர் சிவபெருமான் என்று சொல்லப்பட்டாலும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் போன்ற அனைத்தையும் அவரே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
அத்தகைய பெருமைமிக்க சிவபெருமானை மகிழ்விப்பது மிகவும் எளிது. சிவ மந்திரங்களை உச்சரித்து வழிபட்டாலே அவர் நம்மை ஆட்ெகாள்ளத் தொடங்கிவிடுவார். சிவ மந்திரங்களை உச்சரிப்பதால் பயம் விலகும், நோய்கள் அகலும். கவலைகள் பறந்தோடும். மன வலிமை, ஆற்றல் அதிகரிக்கும். உடல், மனம், அன்மா என்று அனைத்தையும் தூய்மையாக்கும் சக்தி, சிவ மந்திரங் களுக்கு உண்டு.
மனித வாழ்வில் அன்றாடம் அனைவரும் சந்திக்கும் விஷயம், மன அழுத்தம், சோர்வு, தோல்வி, புறக்கணிப்பு. இவற்றின் காரணமாக, நாம் அப்படித்தானோ என்ற எதிர்மறை ஆற்றல் நமக்குள் வந்துவிடும். அப்படி இருப்பவர்களை சக்தி மிக்கவர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக, நேர்மறை சிந்தனையோடு போராடும் பலம் வாய்ந்தவர்களாக மாற்றும் சக்தி சிவ மந்திரங்களுக்கு உண்டு. சிவபெருமானுக்குரிய ஒவ்வொரு மந்திரங்களுக்கும், ஒவ்ெவாரு சக்தி உண்டு. அதில் குறிப்பிட்ட சில மந்திரங்களுக்கான பலன்களை இங்கே பார்க்கலாம்.
பஞ்சாட்சர மந்திரம்
'சிவபெருமானை போற்றுவதில் அனைவராலும் அறியப்பட்ட தாரக மந்திரமாக இருப்பது, 'நமசிவாய' என்ற பஞ்சாட்சர மந்திரம். 'நான் சிவபெருமானை வழிபாடு செய்கிறேன்' என்பது இதன் பொருளாகும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், நம் உடல் புனிதமடையும். சிவபெருமானின் ஆசி எளிதாக வாய்க்கப்பெறும்.
சிவ தியான மந்திரம்
'கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ'
இது சிவபெருமானுக்குரிய தியான மந்திரமாகும். ஒருவா் செய்த எல்லா பாவங்களில் இருந்தும், அவரை விடுவிக்கக் கோரி இறைவனிடம் கேட்பது போல் இந்த மந்திரத்தின் பொருள் அமைந்திருக்கிறது. இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால், பாவங்கள் விலகும்.
மகா மிருத்யுஞ்சய மந்திரம்
அழிக்கும் கடவுளாக சிவபெருமான் இருக்கிறார். எனவே மரண பயத்தை போக்கும்படியும் நாம் அவரிடம் தான் மன்றாட வேண்டியதிருக்கிறது. அப்படி மரணத்தில் இருந்து விடுவிக்கக் கோரி சொல்லப்படுவதுதான் கீழே கொடுக்கப்பட்டுள்ள 'மகா மிருத்யுஞ்சய மந்திரம்' ஆகும்.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்'
இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால், மரண பயம் நீங்கும்.
ருத்ர மந்திரம்
சிவபெருமானின் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுபவர், ருத்திரன். இவரைப் போற்றும்படி அமைந்த மந்திரம்தான் 'ஓம் நமோ பகவதே ருத்ராய'. சிவபெருமானின் ஆசி களைப் பெறுவதற்காகவும், ஒருவர் தன்னுடைய விருப்பம் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வரலாம்.
சிவ காயத்ரி மந்திரம்
மந்திரங்களிலேயே காயத்ரி மந்திரத்திற்கு, அதீத சக்தி உண்டு. இந்த காயத்ரி மந்திரங்களை இயற்றியவர், ரிஷிகளில் ஒருவராக வைத்துப் போற்றப்படும் விஸ்வாமித்திரர் ஆவார்.
'ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்'
இதுதான் சிவனுக்குரிய காயத்ரி மந்திரமாகும். இந்த மந்திரத்தை மன அமைதிக்காகவும், இறைவனின் அருளைப் பெறுவதற்காகவும் தினமும் பாராயணம் செய்து வாருங்கள்.