திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வார்


திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வார்
x

திருமாலின் அடியார்களாகிய 12 ஆழ்வார்களால் பாடப்பட்ட நான்காயிரம் பாடல்களின் தொகுப்பே, ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நூலின் முதலாயிரத்தில் வரும் 1 முதல் 12 வரையான பாடல்கள் ‘திருப்பல்லாண்டு’ என்று போற்றப்படுகிறது. இந்தப் பாடல்களைப் பாடியவர், பெரியாழ்வார். இந்த பாடல் வந்த கதையை இங்கே பார்க்கலாம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வந்த பெரியாழ்வார், மதுரையில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்று, பொற்கிழியை பரிசாகப் பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, அந்தப் பரிசு பெரியாழ்வாருக்கு கிடைக்க வழி செய்தார். அப்போது அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும், கருட வாகன விஷ்ணுவின் தாிசனம் கிடைத்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் இறைவனை நேரில் பார்த்ததால், அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ என்று நினைத்தார், பெரியாழ்வார். அந்த திருஷ்டியை போக்கும் வகையில் அவர் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக 'பல்லாண்டு' பாட முன்வந்தார். அப்படி அவர் பாடியதுதான் 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்.. மல்லாண்ட திண்தோள் மணிவண்ணாஉன் சேவடி செவ்வித்திருக்காப்பு..' என்று தொடங்கும் பாடல். திருப்பல்லாண்டு பாடலை அவர் பாடி முடித்ததும், அவரது உயர்ந்த பக்தியை மெச்சிய மகாவிஷ்ணு "நீயே பக்தியில் பெரியவர்" என்று வாழ்த்தினார். அதனால்தான் அதுவரை 'விட்டுசித்தன்' (விஷ்ணுசித்தர்) என்று அழைக்கப்பட்டு வந்தவருக்கு, 'பெரியாழ்வார்' என்ற பெயர் வந்தது. பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு பாடலே, உலகம் முழுவதும் உள்ள திருமால் கோவில்களில் தினமும் பாடப்படுகிறது.


Next Story