பங்குனி உத்திரம்: பம்பையில் நாளை மறுநாள் அய்யப்பனுக்கு ஆராட்டு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு நாளை மறுநாள் பம்பை நதியில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது
திருவனந்தபுரம்,
பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 13 – ந் தேதி திறக்கப்பட்டது. 14-ம் தேதி முதல் வழக்கமான பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில். 16 - ந் தேதி பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு திருக்கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார்.
10 நாட்கள் நடைபெற்று வந்த விழாவையொட்டி, தினமும் வழக்கமான பூஜைகளுடன் உத்சவ பலி நடைபெற்றது. மற்றும் படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு 9-ம் திருவிழாவான நாளை இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். இதை தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பம்பை ஆற்றில், அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. ஆராட்டையொட்டி, காலை 8 மணிக்கு அய்யப்ப விக்ரகம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம் மேளதாளம் முழங்க சன்னிதானத்தில் புறப்படும்.
பம்பை நதிக்கரையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். ஆராட்டு சடங்குகளை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நிறைவேற்றுவார். தொடர்ந்து புத்தாடை அணிவித்து அய்யப்ப பக்தர்களின் தரிசனத்திற்காக அய்யப்ப விக்ரகம் பம்பை கணபதி கோவிலில் வைக்கப்படும். மாலையில் அய்யப்ப விக்ரகம் ஊர்வலமாக மீண்டும் சன்னிதானம் கொண்டு செல்லப்படும்.
தொடர்ந்து சிறப்பு தீபாரா தனை நடைபெறும். அதை தொடர்ந்து திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். பின்னர் இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும். பம்பை ஆராட்டு நிகழ்வையொட்டி, கேரள அரசின் சிறப்பு பஸ்கள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன .
விஷு பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஏப்ரல் 10- ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். விஷூ பண்டிகை சிறப்பு பூஜை , வழிபாடுகள். ஏப்ரல் 14- ந் தேதி நடக்கும். அன்றைய தினம் அய்யப்ப பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். கனி காணல் வைபவமும் நடைபெறும். சித்திரை மாத பூஜையையொட்டி, ஏப்ரல் 18-ந் தேதி வரை சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.