பங்குனி உத்திரப் பெருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


பங்குனி உத்திரப் பெருவிழா: திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

பாத யாத்திரை குழுவை சேர்ந்த பக்தர்கள் காவடிகள் எடுத்தும், பெண்கள் பால்குடம் சுமந்தும் மலைக்கோவிலுக்கு சென்றனர்.

திருத்தணி:

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், முருகப்பெருமானின் பிரசித்திபெற்ற ஐந்தாம் படைத் திருத்தலமாகும். இத்திருக்கோவிலில் இன்று பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை குழுவை சேர்ந்த பக்தர்கள் மயில்காவடிகள் எடுத்தும், பெண்கள் 252 பால்குடம் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில் இருந்து படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். பின்னர் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் பால்குட அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மதியம் 1 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன், உஷா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதே போல் திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, உற்சவர் சிவகாமி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் நகர வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

1 More update

Next Story