பாவம் போக்கும் பஞ்ச கேதார தலங்கள்
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் மாவட்டத்தில் சிவாலிக் என்ற மலையின் மீது அமைந்திருக்கிறது, பஞ்ச கேதார தலங்கள். கேதார்நாத், துங்கநாத், ருத்ரநாத், மத்தியமகேஷ்வர், கல்பேஷ்வரர் ஆகிய 5 ஆலயங்களும் தான் ‘பஞ்ச கேதார தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன.
'கேதாரம்' என்பது இமயமலைச்சாரலைக் குறிக்கும் சொல்லாகும். மலையைச் சார்ந்த வயல் பகுதியை 'கேதாரம்' என்கிறார்கள். பஞ்ச கோதார தலங்கள் என்பது சிவபெருமானின் உடல் பாகங்கள் தோன்றிய இடமாக சைவ சமயத்தவர்களால் வணங்கப்படுகிறது. கேதார்நாத் -உடல், துங்கநாத்- கைககள், ருத்ரநாத்- முகம், மத்தியமகேஷ்வர்- நாபி (தொப்புள்), கல்பேஷ்வரர் - தலைமுடி என்கிறார்கள். இந்த ஐந்து ஆலயங்களிலும், பாண்டவர்கள் வழிபாடு செய்திருக்கிறார்கள். குருசேத்திரப் போரில் தன் உறவினர்களையே கொன்ற பாவத்தின் காரணமாக, அந்த பாவங்களைப் போக்க இந்த ஐந்து ஆலயங்களையும் எழுப்பி வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஐந்து ஆலயங்களைப் பற்றியும் சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.
மத்தியமகேஷ்வரர்
இமயமலையின் சிவாலிக் மலைத் தொடரில் 3497 மீட்டர் உயரத்தில் இருக்கிறது, மத்தியமகேஷ்வரர் கோவில். மன்சூனா கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலைக்கோவில் இது. பஞ்ச கேதார தலங்களில் நான்காவது ஆலயம் இதுவாகும். பஞ்ச பாண்டவர்களுக்கு, சிவபெருமான் நேரடியாக காட்சி யளித்த இடம் இது என்று சொல்லப்படுகிறது. கோடை காலங்களில் மட்டுமே இந்த ஆலயம் திறந்திருக்கும். குளிர்காலத்தில் இந்த மூலவரான மகேஷ்வரரின் விக்கிரகத்தை, உக்கிமத் என்ற இடத்தில் வைத்து பூஜை செய்வார்கள்.
கேதார்நாத்
சிவாலிக் மலைத் தொடரில், மந்தாகினி ஆற்றின் கரையோரமாக இந்த ஆலயம் இருக்கிறது. இது சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமைக்குரியது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இந்த ஆலயம் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரை மட்டுமே திறந்திருக்கும். குளிர் காலங்களில் கோவிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உக்கிமத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இவ்வாலய ஈசனின் பெயர் 'கேதாரநாதர்' என்பதாகும்.
இந்த ஆலயத்தை தரிசிக்க சாலை வழியாகச் செல்ல முடியாது. கவுரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரம் மலை ஏறித்தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரம் பாடப்பட்ட வடநாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்று. சிவபெருமானை நோக்கி பாண்டவர்கள் தவம் செய்த இடம் இது என்று சொல்லப்படுகிறது. பாண்டவர்கள் இங்கு ஆலயம் அமைத்ததாக கூறப்பட்டாலும், தற்போது இங்கே உள்ள ஆலயம் ஆதிசங்கரரால் 8-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டதாகும்.
கண்களைக் கொள்ளை கொள்ளும் வகையில் கற் கோவிலாக கட்டப்பட்ட இந்த ஆலய கருவறையின் எதிரில் நந்தி சிலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீட்டர் (11,755 அடி) உயரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. ரிஷிகேஷில் இருந்து 223 கிலோமீட்டர் தூரம் இந்த ஆலயத்திற்கு பயணிக்க வேண்டும்.
துங்கநாத்
உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் அமைந்த சிவாலயம் இது என்ற சிறப்புக்குரியது. இது கடல் மட்டத்தில் இருந்து 3,680 மீட்டர் (12,074 அடி) உயரத்தில் இருக்கிறது. இவ்வாலய இறைவனான 'துங்கநாத்' என்ற பெயருக்கு 'கொடுமுடிகளின் நாதர்' என்று பொருள். சோப்டா பள்ளத்தாக்கில் இருந்து 4.5 கி.மீ தூரத்திற்கு ஒரு குறுகிய, அதே நேரம் செங்குத்தான நடைபயணத்தின் மூலமாக இந்த ஆலயத்தை அடையலாம். மிகவும் ஆபத்தான வழிப்பயணமாகவும் இது இருக்கிறது. குளிர்கால மாதங்களில் பாதையும், சரிவுகளும் அடர்த்தியான பனிப்போர்வையால் போர்த்தப்பட்டு, வசந்த காலத்தின் வருகையால் மரங்களிலும், நடைபாதையிலும் அடர்த்தியான ரோடோடென்ரான் மலர்கள் பரந்து காணப்படும்.
கல்பேஷ்வரர்
சிவாலிக் மலைத் தொடாில் சமோலி மாவட்டத்தில் மத்தியமகேஷ்வர் கோவிலின் அருகிலேயே, பழமையான கல்பேஷ்வரர் சிவன் கோவிலும் அமைந்திருக்கிறது. பஞ்ச கேதார தலங்களில் இது ஐந்தாவது ஆலயம். அடா்த்தியான மலை முகடுகளுக்கு நடுவில், பல மரங்கள் சூழ்ந்திருக்க இந்த ஆலயம் இருக்கிறது. ரிஷிகேஷ் - பத்ரிநாத் செல்லும் சாலையில் 253 கிலோமீட்டர் தொலைவில் ஊர்கம் கிராமத்திற்குச் சென்று, பின்னர் 10 கிலோ மீட்டர் மலைப் பாதையில், நடைபயணமாக அல்லது குதிரையில் சென்று கல்பேஷ்வரர் கோவிலை அடையலாம்.
ருத்ரநாத்
சிவாலிக் மலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மற்றும் ருத்திரபிரயாக் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கிறது, ருத்ரநாத் கோவில். இக்கோவில் மூலவரை 'நீலகண்ட மகாதேவர்' என்பர். இந்த ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 3600 மீட்டர் உயரத்தில், அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. பஞ்ச கேதார தலங்களில் மூன்றாவதான, இந்த ஆலயத்தை அடைவது மிகவும் கடினமானதாகும். ரிஷிகேஷ் நகரத்திலிருந்து 241 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபேஷ்வர் என்ற இடம் வரை பஸ் வசதி உள்ளது. இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாகர் என்ற கிராமத்திற்கு சிறிய வாகனத்தில் சென்று, பின்னர் நடைபயணமாக 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ருத்ரநாத் கோவிலை அடைய வேண்டும்.