கிறிஸ்து பிறப்பை வரவேற்போம், வாருங்கள்...


கிறிஸ்து பிறப்பை வரவேற்போம், வாருங்கள்...
x

இயேசுவின் திருவருகை காலங்களில் நியாயாதிபதியாகிய இயேசுவை சந்திக்க நாம் ஆயத்தப்படுவோம்.

கிறிஸ்துவுக்கு முன் 1085 முதல் 1015 வரைக்கும் இஸ்ரவேல் தேசத்தை தாவீது அரசன் ஆட்சி செய்தான். கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனாக ஜீவித்தான் (அப்.13:22).

இவனுடைய மகன் சாலொமோன். கி.மு. 1015 முதல் கி.மு. 975 வரை ஆட்சி செய்தான். ஞானத்தில் சிறந்தவன். 3 ஆயிரம் நீதிமொழிகளை எழுதியவன். இவன் எருசலேம் தேவாலயத்தை 7½ வருடங்களில் கட்டி முடித்தான். தன் கடைசி நாட்களில் அந்நிய நாட்டு பெண்களை திருமணம் செய்து, கர்த்தரை விட்டு விலகிப்போனான்.

எனவே சாலொமோனின் மகனான ரெகொபெயாம் நாட்களில் இஸ்ரவேல், யூதா என்று இரண்டாக பிளவுபட்டது. கி.மு. 975 முதல் 954 வரை நேபாத்தின் மகன் யெரொபெயாம் வடபாகத்துப் பத்துக்கோத்திரங்களுக்கு ராஜாவாகவும்; கி.மு. 975 முதல் 958 வரை யூதா, பென்யமீன் என்னும் இரண்டு கோத்திரங்களுக்கு மாத்திரம் சாலொமோனின் மகன் ரெகொபெயாம் ராஜாவாகவும் ஆட்சி செய்தார்கள்.

கி.மு 741 முதல் 726 வரை யூதாவின் பதினோராம் ராஜாவாக உசியாவின் குமாரன் யோதாமின் மகன் ஆகாஸ் அரசாளும்போது, சிரியா தேசத்து ராஜாவான ரேத்சீனும் இஸ்ரவேல் ராஜியத்தின் 18-ம் ராஜாவாக (கி.மு. 757 முதல் 740 வரை) அரசாட்சி செய்த பெக்காவும் யூதாவுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அப்போது, ஏசாயா என்னும் தீர்க்கதரிசி மூலமாய் கர்த்தர் ஆகாசுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தார்.

"இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்".

'இம்மானுவேல்' என்பதற்கு 'தேவன் நம்மோடிருக்கிறார்' என்று அர்த்தம் (மத் 1:23).

இந்த தீர்க்கதரிசனம் சுமார் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறைவேறிற்று.

இஸ்ரவேலர் தங்களை இரட்சிக்க ஒரு மேசியா வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை அநேகர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷருக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல், வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப்.4:12).

அவர் கி.மு. 4-ம் ஆண்டிலே யூதேயா நாட்டிலே பெத்லேகேம் என்ற ஊரிலே பிறந்து, நாசரேத்தில் வளர்ந்து, தனது 30-வது வயதில் யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பெற்று 3½ ஆண்டுகாலம் ஊழியத்தை நிறைவேற்றினார்.

மானுடரின் பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, 3-ம் நாள் உயிரோடெழுந்து 40 நாட்கள் தாம் உயிரோடிருக்கிறவராக தம்முடைய சீடர்களுக்கும் மற்றவர்களுக்கும் காட்சி கொடுத்து, பல அற்புதங்களை செய்து முடித்து விண்ணகத்துக்கு ஏறிச்சென்றார்.

உலக மக்கள் அவரை ஏற்றுக்கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். காலம் சமீபமாகிவிட்டது. மறுபடியும் நியாயாதிபதியாக அவர் வருவார். இயேசுவின் இந்த அட்வெந்து (திருவருகை) காலங்களில் நியாயாதிபதியாகிய இயேசுவை சந்திக்க நாம் ஆயத்தப்படுவோம்.


Next Story