நினைத்ததை நிறைவேற்றும் பாலமுருகன்


நினைத்ததை நிறைவேற்றும் பாலமுருகன்
x

புதுச்சேரி காலாப்பட்டு - மாத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இத்தல மூலவரான முருகப்பெருமான், குழந்தை வடிவில் அருள்புரிவதால், ‘பாலமுருகன்’ என்று பெயர்.

காடாக இருந்த இப்பகுதியில் பள்ளம் தோண்டியபோது முருகரின் வேல் கிடைத்துள்ளது. அதே இடத்தில் அந்த வேலை நட்டு, பொதுமக்கள் வழிபட்டு வந்துள்ளனர். 1973-ல் அங்கே முருகனுக்கு சிறிய கோவில் அமைக்கப்பட்டது. 2001-ல் இந்த ஆலயம் விரிவுபடுத்தப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்தின் ராஜகோபுரம் 72 அடியில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோவில் வளாகத்தை சுற்றி விநாயகர், மயிலம்மாள், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், பெருமாள், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, துர்க்கை, ஐயப்பன், காலபைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகளில் அருள்புரிகின்றனர்.

குழந்தை இல்லாதவர்கள், இத்தல பாலமுருகரை தரிசித்து விட்டு, கோவில் வளாகத்தில் உள்ள அரசமரத்தில் தொட்டில் கட்டி விட்டு சென்றால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பாலமுருகரை பயபக்தியுடன் வேண்டி சஷ்டி விரதம் இருந்தால், பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். நாகதோஷம் உள்ளவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள நாக தேவதையை வணங்கினால் தோஷம் விலகும். விரைவில் திருமணமும் கைகூடும்.

புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பட்டில் இறங்கி பாலமுருகன் கோவிலுக்குச் செல்லலாம்.


Next Story