திருப்பதியில் ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவா, தரிசன டிக்கெட்டுகள் 21-ந்தேதி வெளியீடு


திருப்பதியில் ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவா, தரிசன டிக்கெட்டுகள் 21-ந்தேதி வெளியீடு
x
தினத்தந்தி 15 March 2024 2:36 PM IST (Updated: 15 March 2024 5:29 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூன் மாதத்துக்கான ஆர்ஜித சேவா, தரிசன டிக்கெட்டுகள் 21-ந்தேதி வெளியிடப்பட உள்ளன.

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக ஜூன் மாதத்துக்கான தரிசனம், ஆர்ஜித சேவா சங்க தொண்டர்களுக்கான டிக்கெட்டுகள், ஸ்ரீவாரி சேவா ஒதுக்கீடு விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்படும். லக்கி டிப்பில் (குலுக்கல் முறை) ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான பதிவு 18-ந்தேதி காலை 10 மணியில் இருந்து 20-ந்தேதி காலை 10 மணி வரை நடக்கிறது. 22-ந்தேதி மதியம் 12 மணிக்குள் பணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை இறுதி செய்ய வேண்டும்.

21-ந்தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீவாரி ஆர்ஜித சேவா கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். ஜூன் 19 முதல் 21 வரை நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தில் பங்கேற்க மார்ச் 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். 21-ந்தேதி மதியம் 3 மணிக்கு ஸ்ரீவாரி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவா, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவா டிக்கெட்டுகள், தரிசன டிக்கெட்டுகள் ஆகிய உற்சவ சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் வெளியிடப்படும்.

அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 23-ந்தேதி காலை 10 மணிக்கு கிடைக்கும். ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம் மற்றும் அறைகள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். 25-ந்தேதி காலை 10 மணிக்கு, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பக்தர்களுக்கு வழங்கப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் அறை ஒதுக்கீடு 25-ந்தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

திருமலையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களுக்கான சேவை, திருப்பதி ஒதுக்கீடு 27-ந்தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் வெளியிடப்படும். மேலே உள்ள அனைத்து ஆன்லைன் ஒதுக்கீட்டையும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in மூலம் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story