முக்தியை அருளும் அண்ணாமலை தீபம்


முக்தியை அருளும் அண்ணாமலை தீபம்
x

தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும். மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும், தோஷங்களையும் போக்கும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.

மூன்று வகை தீபம்

கார்த்திகை தீபத் திருவிழாவை, 'குமராலய தீபம்', 'விஷ்ணுவாலய தீபம்', 'சர்வாலய தீபம்' என்று மூன்றாகப் பிரித்து, ஆலயம் மற்றும் இல்லங்களில் கொண்டாடுவார்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அன்று, முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும் நிகழ்வை 'குமராலய தீபம்' என்பார்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் ரோகிணி நட்சத்திரம் அன்று, ெபருமாள் ஆலயங்களில் கொண்டாடப்படும் நிகழ்வை, 'விஷ்ணுவாலய தீபம்' என்று அழைப்பார்கள்.

அனைத்து ஆலயங்களிலும், இல்லங்களிலும் கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் தீபம் ஏற்றிக் கொண்டாடப்படும் நிகழ்வையே 'சர்வாலய தீபம்' என்கிறோம்.

சிவபெருமான் அருள்புரியும் திருத்தலங்கள் எண்ணற்றவை இருந்தாலும், பெரும் புகழுக்குரிய ஆலயங்களில் குறிப்பிடத்தக்கது, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில். பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாகவும் விளங்கும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விசேஷம். இந்த நாளில் இங்கு கிரிவலம் வந்து, இறைவனை வழிபடுபவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும்.

கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் வரும் நிகழ்வைத்தான், அதற்கான அடிப்படையாக பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதன்படி விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் இடையே, 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களின் பிரச்சினை சிவபெருமானிடம் சென்றது. சிவபெருமான் தன்னை ஒரு தீப வடிவமாக மாற்றி, விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். அவரது அடி முடியில் ஒன்றை யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அடியைத் தேடி வராக (பன்றி) வடிவம் எடுத்து விஷ்ணுவும், முடியைத் தேடி அன்னப்பறவை உருவம் கொண்டு பிரம்மனும் புறப்பட்டனர். பல நூறு ஆண்டுகள் கடந்தபிறகும் கூட, அவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடியையோ, முடியையோ காண முடியவில்லை. இதனால் தான் ஈசனை, 'அடிமுடி காண முடியாத அருட்பெருஞ்ஜோதி' என்று அழைக்கிறோம். இறுதியில் இருவரும் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஜோதி வடிவில் அருட்காட்சி வழங்கியதுபோல, அனைவருக்கும் அருள வேண்டும் என்று வேண்டினர்.

மேற்கண்ட நிகழ்வு நடைபெற்ற இடம் திருவண்ணாமலை திருத்தலம் என்பதால், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் மாலை வேளையில், 2668 அடி உயர மலையில் தீபம் ஏற்றப்படும். சோதி வடிவில் உயர்ந்து நின்ற சிவபெருமான்தான், இங்கு மலை வடிவில் இருப்பதாக ஐதீகம்.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் ஆலயம், பஞ்ச பூதத் திருத்தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை சென்று தீப வழிபாடு செய்ய அனைவராலும் இயலாது. அதே நேரம் இறைவனை தங்கள் வீட்டிலும் ஜோதி வடிவில் வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அனைவரது வீடுகளிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வணங்குகிறார்கள்.

விரதம் இருப்பது எப்படி

கார்த்திகை தீபத் திருநாளுக்கு முன்தினமான பரணி நட்சத்திரம் அன்று, பகல் நேரத்தில் மட்டும் ஒரு வேளை உணவு சாப்பிட வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி, இறைவனை வழிபட்டு தண்ணீர் மட்டும் பருக வேண்டும். அன்று முழுவதும் உணவைத் தவிர்த்து இரவு கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பால் அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடித்து வருபவர்களுக்கு, மறுபிறப்பு இல்லை. சந்ததியினர் பெரும் புகழோடு வாழ்வர் என்பது ஐதீகம்.

கார்த்திகை தீபம் வழிபடும் முறை

திருவிளக்குகள் இறைவனின் பிரதிநிதியாக பார்க்கப்படுவதால் அவற்றிற்கான மரியாதையை நாம் அளிக்க வேண்டும். பூஜைக்கு ஏற்றப்படும் திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாகவும், கார்த்திகை தீபத்தன்று அவல், பொரியில் வெல்லப் பாகு சேர்த்து கார்த்திகை பொரி படைத்தும் வழிபாடு செய்யுங்கள்.

கார்த்திகை தீபத் திருநாள் அன்று அகல் விளக்குகளை சுவாமி அறையில் ஏற்றி, தெரிந்த சுலோகங்களை பாடி, கற்பூரம் தீபாராதனை செய்து வழிபடுங்கள். விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு. வெறும் வாயினால் ஊதி விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும்.

லிங்கோத்பவரே அண்ணாமலையார்

பெரும்பாலான சிவாலயங்களில் கருவறையைச் சுற்றிவரும் போது, சன்னிதிக்கு நேர் பின்புறம் 'லிங்கோத்பவர்' இருப்பதைக் காணலாம். இவரே அடி முடி காண முடியாத அண்ணாமலையார். ஆம்.. இவரது சிற்பமானது ஒரு நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். அதனுள் அவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் மறைந்திருக்கும். அவரது தலைப்பகுதியை ஒட்டி அன்னமும், கால் அடியில் பன்றியும் வடிக்கப்பட்டிருக்கும். விஷ்ணுவும், பிரம்மாவும் இறைவனின் அடி முடியைக் காண்பதற்காக சென்ற நிகழ்வை கண் முன் நிறுத்தும் வகையில்தான் இந்த 'லிங்கோத்பவர்' சிற்பம் அமைந்திருக்கும்.

சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவம் கொண்டது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு. ஆனால் வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. சிவனும் அதே போல, ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதை உணர்த்தவே, அவா் சிவலிங்க வடிவமாகவும், லிங்கோத்பவர் வடிவமாகவும் அருள்கிறார்.

திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் ஒளி வடிவில் ஈசன் காட்சி கொடுத்த தினம் சிவராத்திரி என்கிறார்கள். அந்தக் காலத்தை 'லிங்கோத்பவர் காலம்' என்றும் சொல்வார்கள். இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையான நேரமே லிங்கோத்பவர் காலம். ஆண்டு தோறும் வரும் மகா சிவராத்திரி அன்று, இந்த நேரத்தில் லிங்கோத்பவர் அருள்காட்சி தருவார்.

விளக்குகளின் வகைகள்

பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு எனப் பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிக்கேற்ப மனத் தூய்மையுடன் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபட வேண்டும். கார்த்திகை தீபத் திருநாளில் மட்டும் அல்லாது, அனைத்து நாட்களிலுமே, அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பாகவும், மாலையில் சூாியன் மறைவதற்கு முன்பாகவும், வீட்டில் வாசல் தெளித்து கோலமிட்டு, பூஜை அறையிலும், வீட்டின் வாசல் படியிலும் விளக்கு ஏற்றலாம். இதனால் நேர்மறை சக்திகள் நம்மை சூழ்ந்து, வாழ்வில் இருள் விலகி ஒளி பிறக்கும்.


Next Story