சிதம்பரம் நடராஜர் கோவில் 1000 கால் மண்டபத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவில் 1000 கால் மண்டபத்தில் ஆனி திருமஞ்சன தரிசனம் விமரிசையாக நடைபெற்றது.
கடலூர்,
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை தங்க கைலாச வாகன வீதியுலாவும், நேற்று தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலாவும் நடைபெற்றன.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
இதையடுத்து நேற்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன.
பஞ்சமூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்த நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜ மூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர்.