10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 10ம் நாளாக நீடித்து வருகிறது.
ஜெருசலேம்,
Live Updates
- 16 Oct 2023 3:01 PM IST
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மீண்டும் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். காசா மீது முப்படை தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆண்டனி பிளிங்கன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறாக முடியும் என்று ஜோ பைடன் கூறியிருந்த நிலையில், ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேலுக்கு மீண்டும் சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமைதான் இஸ்ரேல் பிரதமரை ஆண்டனி பிளிங்கன் சந்தித்து இருந்தார்.
- 16 Oct 2023 1:18 PM IST
சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை - இஸ்ரேல்
காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்து செல்ல ரபா நகரில் உள்ள எல்லைப்பகுதியே ஒரே வழியாகும். இதனிடையே, ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் காசாவுடனான எல்லையை எகிப்து மூடியுள்ளது.
இதனிடையே, காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், காசாவில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறவும் அதற்கு ஈடாக மனிதாபிமான நிவாரண உதவிகளை காசாவுக்குள் கொண்டு செல்லவும் ரபா எல்லையை எகிப்து திறக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஹமாசுக்கு எதிரான போரில் இதுவரை சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டினர் காசாவை விட்டு வெளியேறுவதற்கு ஈடாக மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- 16 Oct 2023 12:18 PM IST
காசாவுடனான எல்லையை திறக்க எகிப்துக்கு இஸ்ரேல் அனுமதி என தகவல்...!
காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் - இஸ்ரேல் இடையே இன்று 10வது நாளாக போர் நீடித்து வருகிறது. காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்து செல்ல ரபா நகரில் உள்ள எல்லைப்பகுதியே ஒரே வழியாகும். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே காசாவுடனான எல்லையை எகிப்து மூடியுள்ளது.
இதனால், ஆயிரக்கணக்கானோர் காசாவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதேவேளை, போர் தொடங்கிய ஓரிரு நாளில் ரபா எல்லை அருகே இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், உணவு உள்பட மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலவி வந்தது.
காசா முனையில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் அப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், காசாவின் ரபா நகர் எல்லையை இன்று திறக்க எகிப்துக்கு இஸ்ரேல் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இந்த எல்லை வழியாக வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உணவு உள்பட மனிதாபிமான நிவாரண உதவி பொருட்களை எகிப்து எல்லை வழியாக காசாவுக்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகக்குறுகிய நேரம் மட்டுமே இந்த எல்லை திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. எகிப்துடனான எல்லை திறக்கப்படும்போது தெற்கு காசா பகுதியில் எந்த வித தாக்குதலும் நடத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரபா நகர எல்லையை இன்று காலை 10 மணி முதல் (தற்போது இஸ்ரேல் நேரம் 9.45) திறக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 16 Oct 2023 11:09 AM IST
ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்
ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனிடையே, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று பேட்டியளித்தார்.
அப்போது, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த ஜோ பைடன், ஹமாஸ் அமைப்பு ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், காசா முனையை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறாகிவிடும். காசாவில் பாலஸ்தீன அரசு மற்றும் பாலஸ்தீன நாடு அமைவதற்கான வழி தேவை உள்ளது. அதேவேளை, பாலஸ்தீன நாடு அமைவதற்கான வழியை தற்போது இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது.
ஆனால், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புகளின் கொள்கைகளை பெரும்பாலான பாலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இஸ்ரேல் விரைவில் புரிந்துகொள்ளும்.
லெபனானில் இருந்து இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. அவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் தாக்குதல் நடத்த வேண்டாம். போரை நீட்டிக்க வேண்டாம்’ என்றார்.
- 16 Oct 2023 9:49 AM IST
பலி எண்ணிக்கை:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்து 670 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது.
- 16 Oct 2023 8:14 AM IST
ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ள பணய கைதிகளை உடனடியாக விடுவிக்கும்படி ஐ.நா. பொது செயலாளர் அன்டானியோ குட்டெரஸ் தெரிவித்து உள்ளார்.
- 16 Oct 2023 8:01 AM IST
10ம் நாளாக தொடரும் போர்:
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 10வது நாளாக நடைபெற்று வருகிறது.
- 16 Oct 2023 5:06 AM IST
இதுவரை மொத்தம் 330 பாலஸ்தீனியர்கள் கைது - இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல்
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 330 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அவர்களில் 190 பேர் ஹமாஸ் படையினருடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு கரையில் இஸ்ரேல் படைகள் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்படும் நிலையில், இதுவரை 55 மேற்கு கரை பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 16 Oct 2023 5:05 AM IST
இஸ்ரேல்-ஹமாஸ் போர்; தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 28 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மேலும் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் போரில் கொல்லப்பட்ட தாய்லாந்து நாட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 17 பேரை ஹமாஸ் குழுவினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- 16 Oct 2023 5:00 AM IST
இஸ்ரேலுக்கு உதவும் வகையில் 2-வது போர்க்கப்பலை அனுப்பும் அமெரிக்கா
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்கிய நிலையில், லெபனான் மற்றும் சிரியா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இந்த போர் மேலும் விரிவடையும் அபாயம் நிலவுகிறது.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எந்த நேரத்திலும் உதவும் வகையில் அமெரிக்கா ஏற்கனவே தனது மிகப்பெரிய போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்திவைத்திருக்கும் நிலையில், மேலும் ஒரு போர்க்கப்பலை அங்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்க ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார்.