விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்


விளை நிலத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காமசமுத்திரத்தில் விளை நிலத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் ரூ.30 லட்சம் மதிப்பிலான பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றன.

கோலார் தங்கவயல்

காட்டுயானைகள் அட்டகாசம்

கோலார் தங்கவயலை அடுத்த காமசமுத்திரா, மாஸ்தி கிராமங்கள் தமிழக எல்லைப்பகுதியில் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தமிழக வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுயானைகள், விளை நிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்கின்றன.

அதாவது காமசமுத்திரா, மாஸ்தி கிராமத்திற்குள் புகும் காட்டுயானைகள் முட்டை கோஸ், காலி பிளவர், கேழ்வரகு, பப்பாளி உள்ளிட்ட விளை பயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையின் பேரில் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் போய்விடுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழக வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் கூட்டம் காமசமுத்திரா, மாஸ்தி கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த காலி பிளவர், கேழ்வரகு, நெல், பப்பாளி ஆகிய விளைபயிர்களை மிதித்து நாசப்படுத்திவிட்டு சென்றன.

ரூ.30 லட்சம் விளை பயிர்கள் நாசம்

இந்தநிலையில் நேற்று காலை விவசாயிகள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, விளை பயிர்கள் நாசமாகி கிடந்தது. இதனால் ரூ.30 லட்சம் மதிப்பிலான விளை பயிர்கள் நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது விவசாயிகள், பொதுமக்கள் வனத்துறையினரை சுற்றி வளைத்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் விளை பயிர்களை நாசப்படுத்திவிட்டு சென்ற காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.

இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story