தீண்டாமை கொடுமையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தீண்டாமை கொடுமையால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொள்ளேகால்:
தீண்டாமை கொடுமையால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி தற்கொலை
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா யாதவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 45). தொழிலாளியான இவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்ஆவார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சிவராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த குடும்பத்தினர் பேகூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குண்டலுபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் பேகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற சிவராஜின் சகோதரர் மற்றும் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமையா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
தீண்டாமை கொடுமை
அப்போது அவர்கள், யாதவனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு சமுதாயத்தினரின் வீட்டிற்கு சிவராஜ் சென்றார். அப்போது அவர்கள் சிவராஜை புறக்கணித்து வெளியே அனுப்பினர். இந்த தீண்டாமை கொடுமையால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான அதே கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா, சந்தன், ரேவநாயகா, சந்தோஷ், சந்தேஷ், வெங்கடராமநாயக், நிங்கநாயக், சிக்கபெல்லநாயக், ஆலத்தூர் மகாதேவநாயக், டி.மகாதேவநாயக், தேவநாயக், சின்னசாமி நாயக், ரங்கசாமி நாயக் ஆகிய 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
இதை கேட்ட போலீஸ் சூப்பிரண்டு உடனே பேகூர் போலீசாரை அழைத்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதை கேட்ட பேகூர் போலீசார் சம்பந்தப்பட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.