ஆழ்துளை கிணற்றின் மோட்டாரில் தாமிர கம்பிகள், வயர்கள் திருட்டுமர்ம நபர்களை பிடிக்க கோரி பெண்கள் தர்ணா
மாரிக்குப்பம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் மோட்டாரில் இருந்து தாமிர கம்பிகள், வயர்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை உடனே பிடிக்க பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலார் தங்கவயல்:
மாரிக்குப்பம் பகுதியில் ஆழ்துளை கிணற்றின் மோட்டாரில் இருந்து தாமிர கம்பிகள், வயர்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை உடனே பிடிக்க பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆழ்துளை கிணறு
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் பகுதிக்கு உட்பட்ட 2-வது மற்றும் 3-வது சாமி லைன் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மீட்பர் ஆலயம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான் அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் இருந்து 20 அடி தூரத்தில் மோட்டார் அறை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஆழ்துளை கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து மோட்டார் அறையை பார்வையிட்டனர். அப்போது யாரோ மர்ம நபர்கள் மோட்டார் அறையில் இருந்த தாமிர கம்பிகள் அடங்கிய வயர்களை திருடிச் சென்று இருந்ததும், அதனால் மோட்டார் ஓடாமல் இருந்ததும் தெரியவந்தது.
போலீசில் புகார்
பின்னர் இதுகுறித்து அவர்கள் தண்ணீர் திறக்கும் ஊழியரை அழைத்து தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது மின் இணைப்பை துண்டித்துவிட்டு மர்ம நபர்கள் தாமிர கம்பிகள் அடங்கிய வயர்களை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதனால் அவர் இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரும், அந்த வார்டு கவுன்சிலருமான தங்கராஜிடம் தெரிவித்தார். அவர் இதுபற்றி போலீசில் புகார் செய்தார்.
இதற்கிடையே அப்பகுதி பெண்கள் இச்சம்பவத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கும் மோட்டாரில் இருந்து வயர்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை உடனே போலீசார் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், மர்ம நபர்களை வலைவீசி தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.