பெங்களூருவில் வடமாநில தொழிலாளி குத்தி கொலை
பெங்களூருவில் வடமாநில தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு:
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சஜ்ஜன்சிங் (வயது 33). இவர், வடமாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். பெங்களூருவில் தங்கி இருந்து கூலித் தொழிலாளியாக அவர் வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் ஆர்.எம்.சி. யார்டு அருகே சோமேஷ்வரா நகருக்கு சஜ்ஜன்சிங் வந்திருந்தார். அங்குள்ள கடையின் முன்பாக காலை 7.30 மணியளவில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்களுக்கும், சஜ்ஜன் சிங்குக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. இந்த நிலையில், ஆத்திரமடைந்த மர்மநபர்கள், சஜ்ஜன்சிங்கை கத்தியால் சரமாரியாக குத்தினார்கள். இதில், அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
உடனே மர்மநபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சஜ்ஜன் சிங் இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் மகாலட்சுமி லே-அவுட் போலீசார் விரைந்து வந்து சஜ்ஜன்சிங் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள். அப்போது அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுகுறித்து மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.