கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி ஓய்வு பெறுகிறார்


கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி  ஓய்வு பெறுகிறார்
x

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருக்கும் ரிதுராஜ் அவஸ்தி (சனிக்கிழமை) ஓய்வு பெறுகிறார். இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக(பொறுப்பு) அலோக் ஆராதேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

அலோக் ஆராதே நியமனம்

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் ரிதுராஜ் அவஸ்தி. இவர், நாளை(சனிக்கிழமை) ஓய்வு பெற உள்ளார். இதையடு்த்து, கர்நாடக ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை

நீதிபதியை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக (பொறுப்பு) அலோக் ஆராதேவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின்பேரில், கர்நாடக ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) அலோக் ஆராதேவை மத்திய அரசு நியமித்திருக்கிறது.

நாளை ரிதுராஜ் அவஸ்தி ஓய்வு பெறுவதால், வருகிற 3-ந் தேதியில் இருந்து கர்நாடக ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே தனது பணியை தொடங்க உள்ளார். கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வரும் ரிதுராஜ் அவஸ்தி, இதற்கு முன்பு அலகாபாத் ஐகோர்ட்டில் லக்னோ அமர்வில் மூத்த நீதிபதியாக இருந்தார். அவரை, கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு சிபாரிசு செய்திருந்ததால், கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 18-ந் தேதி ரிதுராஜ் அவஸ்தி தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்று இருந்தார்.

பொறுப்பு தலைமை நீதிபதியாக...

கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ள அலோக் ஆராதே 1964-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி பிறந்திருந்தார். 1988-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி வக்கீலாக தன்னை பதிவு செய்திருந்தார். பின்னர் 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி மத்திய பிரதேசத்தில் கூடுதல் நீதிபதியாக அலோக் ஆராதே முதன் முதலில் நியமிக்கப்பட்டு இருந்தார். 2011-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி பதவி உயர்வு பெற்று அவர் நீதிபதியாக பதவி ஏற்று இருந்தார்.

பின்னர் 2016-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டு நீதிபதியாக அவர் பணி இடமாறுதல் செய்யப்பட்டார். 2018-ம் ஆண்டு மே 11-ந் தேதி ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, அவர் கா்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக பணி இடமாறுதல் செய்யப்பட்டு, தற்போது கர்நாடக ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக அலோக் ஆராதே பதவி ஏற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அலோக் ஆராதே சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரை சேர்ந்தவர் ஆவார்.


Next Story