மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு கமலாநகரில் வசித்து வந்தவர் கங்காதர்(வயது 21). இவர், ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். நேற்று காலையில் தான் படிக்கும் என்ஜினீயரிங் கல்லூரிக்கு ஒரு சான்றிதழ் வாங்குவதற்காக கங்காதர் சென்றார். தன்னுடைய நண்பருடன் அவர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டார். யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாரப்பன பாளையாவில் உள்ள பூ மார்க்கெட் அருகே கங்காதர், அவரது நண்பர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் வந்த அரசு பஸ்சும், கங்காதரரின் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கங்காதர், அவரது நண்பர் லிகித் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் காயம் அடைந்த கங்காதர் பரிதாபமாக இறந்து விட்டார். லிகித் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அரசு பஸ் டிரைவரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் கடந்த 10 நாட்களில் பி.எம்.டி.சி.(அரசு) பஸ் மோதியதில் கங்காதர் உள்பட 3 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.