குடிநீர் வினியோகம் ெசய்ய மாதம் ரூ.500 கேட்கும் ஊழியர்கள்: காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்


குடிநீர் வினியோகம் ெசய்ய மாதம் ரூ.500 கேட்கும் ஊழியர்கள்: காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராஜராஜேஸ்வரி நகரில் குடிநீர் வினியோகம் செய்ய ஊழியர்கள் மாதம் ரூ.500 கேட்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

ஆர்.ஆர்.நகர்:

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் (ஆர்.ஆர்.நகர்) அருகே தொட்டபிதரகல்லு வார்டு மாரண்ணா பகுதியில் கடந்த ஓராண்டாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி வாட்டர்மேன்கள் பொதுமக்களிடம் மாதம் ரூ.500 கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் குடிநீர் வினியோகம் செய்வோம் என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் அந்தப்பகுதியில் டேங்கர் லாரிகள் மூலம் வாட்டர்மேன்கள் குடிநீர் வினியோகம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், மாரண்ணா பகுதியில் செயற்கையான குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கி மாநகராட்சி வாட்டர்மேன்கள் குடிநீர் வினியோகம் செய்ய மாதம் ரூ.500 லஞ்சம் கேட்பதாக மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், லஞ்சம் கேட்கும் மாநகராட்சி வாட்டர்மேன்களை கண்டித்து நேற்று மாரண்ணா பகுதியை சேர்ந்த மக்கள் காலி குடங்களுடன் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் வினியோகம் செய்யும் ஆழ்துளை கிணற்றுக்கும் பூட்டு போட்டனர்.

அப்போது அவர்கள், மாநகராட்சி வாட்டர்மேன்கள் செயற்கையாக குடிநீர்தட்டுப்பாட்டை உருவாக்கி, டேங்கர் லாரிகளை வைத்து தண்ணீரை வியாபாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த அனுசுயம்மா மற்றும் லட்சுமி ஆகியோர் கூறுகையில், 'எங்கள் பகுதியில் கடந்த ஓராண்டாக செயற்கையாக குடிநீர் தட்டுப்பாட்டை உருவாக்கி வாட்டர்மேன்கள் தண்ணீரை வியாபாரம் செய்து வருகிறார்கள். ரூ.500 கொடுத்தால் தான் தண்ணீர் திறந்து விட முடியும் என்று கூறுகிறார்கள். தண்ணீர் என்ற பெயரில் பணம் சம்பாதிப்பதை வாட்டர்மேன்கள் தொழிலாக கொண்டுள்ளனர்.

தண்ணீரை வைத்து வியாபாரம் செய்யும் வாட்டர்மேன்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து பலமுறை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. இனிமேலாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாட்டர்மேன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story