சிக்கமகளூரு; காபி தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
சிக்கமகளூரு அருகே காபித்தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிக்கமகளூரு-
சிக்கமகளூரு அருகே காபித்தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காபித்தோட்டம்
சிக்கமகளூரு அருகே உள்ள சிக்கமாகரவள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஒன்னையா. இவருக்கு சொந்தமான காபி தோட்டம் கிராமத்தையொட்டி அமைந்துள்ளது. இவரது காபித்தோட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் இவரது காபித்தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வனப்பகுதியில் இருந்து 2 காட்டுயானைகள் வெளியேறின. அந்த காட்டுயானைகள் ஒன்னையாவின் காபித்தோட்டத்திற்குள் புகுந்தன.
எச்சரிக்கை
பின்னர் அந்த காட்டுயானைகள் காபி செடிகளை தும்பிக்கையால் பிடுங்கி எறிந்தும், தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தின. பின்னர் அவைகள் அங்கு 2 பேரல்களில் கலக்கி வைக்கப்பட்டு இருந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை கீழே கொட்டி நாசப்படுத்தின. அதுமட்டுமின்றி அவைகள் மிளகு செடி, வாழை மற்றும் பாக்கு மரம் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்திவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
இதனால் பாதிக்கப்பட்ட ஒன்னையா, இதுபற்றி வனத்துறையினரிடம் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.