மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மங்களூரு கப்பல் துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மங்களூரு-
மங்களூரு கப்பல் துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு கப்பல்துறை முகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் ஜாகீர் உசேன் (வயது 58). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் ஆகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் துறைமுகப்பகுதியில் இரவுப்பணியில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து காலையில் பணி முடிந்ததும், மற்றொரு பாதுகாப்பு படை வீரரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து சென்றார். இந்தநிலையில் அதே பகுதியில் இருந்த கழிவறையில் திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், கழிவறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு ஜாகீர் உசேன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்த அவர்கள் உடனே பனம்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜாகீர் உசேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வாலுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த அவர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் விசாரணை நடத்தினார். விசாரணையில் நேற்று முன்தினம் ஜாகீர் உசேன் துறைமுகப்பகுதியில் இருந்த முன்பக்க கேட்டில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார் என்று தெரியவந்தது.
வழக்கம்போல பணி முடிந்து திரும்பியவர் முன்பக்க கேட்டில் உள்ள கழிவறைக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இதுகுறித்து பனம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில்பாதுகாப்பு படை வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.