ஆயுத பூஜை காரணமாக பெங்களூருவில் 30 சதவீத குப்பைகள் குவிந்தன
பெங்களூருவில் ஆயுத பூஜை காரணமாக நகரில் 30 சதவீத குப்பைகள் கூடுதலாக குவிந்துள்ளன. நகரின் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கிறது.
பெங்களூரு:
பெங்களூருவில் ஆயுத பூஜை காரணமாக நகரில் 30 சதவீத குப்பைகள் கூடுதலாக குவிந்துள்ளன. நகரின் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கிறது.
சாலைகளில் குவிந்த குப்பைகள்
பெங்களூருவில் கடந்த 23 மற்றும் 24-ந் தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக கடந்த 23-ந் தேதி நகரில் ஆயுத பூஜைக்காக மக்கள் தங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு பூ மாலை மற்றும் வாழை மரச் செடி வைத்து பூஜை செய்திருந்தார்கள். அதுபோல், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகளும் பூஜைகள் நடத்தப்பட்டு இருந்தது.
பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட், மல்லேசுவரம், கே.ஆர்.புரம் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூக்கள், வாழை மரச்செடிகள் விற்பனை அமோகமாக இருந்தது. இந்த நிலையில், ப ண்டிகை முடிந்த பின்பு பூஜை செய்த பூக்கள், வாழை மரச் செடிகள், பிற பூஜை பொருட்கள், குப்பை கழிவுகளை சாலைகளில் போட்டு மக்கள் குவித்து வைத்துள்ளனர்.
30 சதவீதம் கூடுதலாக குவிந்தது
நகரின் எந்த சாலைக்கு சென்றாலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக மார்க்கெட்டுகளிலும் குப்பை கழிவுகள் அதிகமாக குவிந்துள்ளது. பெங்களூருவில் தினமும் 4 ஆயிரம் டன் குப்பைகள் சேரும். அவற்றை துப்புரவு தொழிலாளர்கள் வாகனங்களில் அள்ளி செல்வது வழக்கம். ஆனால் ஆயுத பூஜை காரணமாக வழக்கத்தை விட கூடுதலாக 30 சதவீத குப்பைகள் குவிந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த குப்பைகள் அள்ளி செல்லப்படாமல் பல இடங்களில் குவிந்து கிடப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சுதாரித்து கொண்டுள்ள மாநகராட்சி அதிகாரிகள், குப்பை அள்ளும் வாகனங்களை கூடுதலாக பயன்படுத்தி குப்பை கழிவுகளை அள்ளி செல்லும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். அதுபோல், மாநகராட்சியின் மார்ஷல்களும் எங்கெல்லாம் குப்பைகள் அள்ளப்படாமல் இருக்கிறதோ? அங்குள்ள குப்பை கழிவுகளை துப்புரவு தொழிலாளர்கள் மூலமாக அகற்றி வருகிறார்கள்.