பா.ஜனதாவில் ரவுடிகள் அணி தொடங்குவது எப்போது?; கர்நாடக காங்கிரஸ் கேள்வி


பா.ஜனதாவில் ரவுடிகள் அணி தொடங்குவது எப்போது?; கர்நாடக  காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 10:17 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவில் ரவுடிகள் அணி தொடங்குவது எப்போது? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

ரவுடிகளுக்கு நேசம்

கர்நாடகத்தில் சானிட்டரி நாப்கின் டெண்டரிலும் 40 சதவீத கமிஷன் அடிக்க இந்த பா.ஜனதா அரசு சதி செய்துள்ளது. ரவுடிகள் பா.ஜனதாவில் சேருவதை அக்கட்சி தலைவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். இதனால் பா.ஜனதா மீது ரவுடிகளுக்கு நேசம் பொங்கி வழிகிறது. அதனால் பா.ஜனதாவின் ரவுடிகள் அணி எப்போது தொடங்கப்படும்?. இந்த அணி தொடக்க விழாவுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வருவாரா? அல்லது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையே தொடங்கி வைப்பாரா?.

ரவுடிகள் கட்சியில் சேருவதை நியாயப்படுத்தும் பா.ஜனதா தலைவர்கள் ரவுடிகளின் பக்கம் நிற்கிறார்கள். தாங்களும் ரவுடிகளாக இருந்ததை அவர்கள் நினைவு கூறுகிறார்கள். ரவுடிகளால், ரவுடிகளுக்காக, ரவுடிகளுக்காகவே என்பது பா.ஜனதாவின் புதிய முழக்கமாக உள்ளது. ஜனநாயக மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தின் விருப்பங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பா.ஜனதா ரவுடிகள் அணியை தொடங்குவதாக தெரிகிறது. இதன் மூலம் பா.ஜனதாவின் உண்மையான கலாசாரம் அம்பலமாகிறது.

சுதாகரே நேரடி பொறுப்பு

பெலகாவியில் செயற்கை சுவாசம் கிடைக்காததால் நோயாளி சாவு, ஹாசனில் சிகிச்சை நிராகரிக்கப்பட்டதால் ஒருவர் இறப்பு, மதுகிரியில் டாக்டரின் அலட்சியத்தால் நோயாளி உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இதற்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகரே நேரடி பொறுப்பு ஆவார். சுகாதாரத்துறையை ஊழல் துறையாக மாற்றிய பெருமை அவரை சாரும். இந்த பா.ஜனதா அரசு மக்களின் உயிர்களை காப்பதற்கு பதிலாக உயிர்களை பறிக்கிறது.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

1 More update

Next Story