பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை
மண், பசுஞ்சாணம், மஞ்சள், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் என பல்வேறு பொருட்களால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம்.
எந்த ஒரு சுப நிகழ்வாக இருந்தாலும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வணங்கியே தொடங்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பதும் ஐதீகம்.
ஆன்மீக உரை நிகழ்த்துபவர்கள் ஆரம்பத்தில் ஆனைமுகனை வணங்கிவிட்டு, கடைசியில் ஆஞ்சநேயரைத் துதித்து மங்களம் பாடி முடிப்பதை கேட்டிருக்கலாம். அதை குறிப்பிடத்தான் 'பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது' என்பார்கள். அதற்கு மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது' என்று பொருள்.
அனைத்தும் மிக நன்றாக நடந்தது என்ற உயர்வான கருத்து இந்த பழமொழியில் உள்ளது. ஆனால், பலர் இதை அறியாமல், தொடங்கிய காரியம் நினைத்தபடி நடக்காமல் வேறு வகையில் முடிந்ததை குறிப்பிடுவதற்காக இந்த பழமொழியை பயன்படுத்துகின்றனர்.
இதேபோல் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்றும் கூறுவதுண்டு. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் மண், பசுஞ்சாணம், மஞ்சள், கருங்கல், பளிங்குக் கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் (நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும். இதனைத் தான் "பிடித்து வைத்தால் பிள்ளையார்" என்று சொல்கிறார்கள்.