தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்


தசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்
x

பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தசரா விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 7-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் அம்மன் பூஞ்சப்பரத்தில் நடராஜர் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8-ம் நாளான நேற்று இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தசரா திருவிழாவையொட்டி, விரதம் இருந்து காப்பு கட்டி பல்வேறு வேடங்களை அணிந்த பக்தர்கள் ஒவ்வொரு ஊரிலும் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர்.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களிலும் வேடமணிந்த தசரா பக்தர்கள் குழுக்களாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் வழிபட்டும், வீதி வீதியாக சென்றும் காணிக்கை சேகரிக்கின்றனர்.

ஒவ்வொரு தசரா குழுவிலும் காளி, சிவன், பிரம்மன், விஷ்ணு, விநாயகர், முருகபெருமான், ராமர், கிருஷ்ணர், நாராயணர், அனுமர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள் அணிவகுத்து செல்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. அரசன், குறவன், கரடி, கிளி, புலி போன்ற வேடங்களையும் சில பக்தர்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வழிபடுகின்றனர். கோவில்களில் தசரா பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' போன்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு வழிபடுகின்றனர். காளி வேடம் அணிந்த பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி செல்கின்றனர். சில பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் தசரா திருவிழா களைகட்டியது.

குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவின் 9-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.


Next Story