சாதி ஏற்றத்தாழ்வுகளை அகற்றிய ஆதிநாதர்


சாதி ஏற்றத்தாழ்வுகளை அகற்றிய ஆதிநாதர்
x

முன்ஜென்ம சாபத்தினால் புலையனாக பிறப்பெடுத்த தாந்தனுக்கு முக்தியளித்த வரலாற்றை விளக்கும் வண்ணம் ஆதிநாதர் கோவில் படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது.

நவதிருப்பதி தலங்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில், குருவின் அம்சமாக விளங்குகிறது. குருவாக இருந்து உபதேசித்ததால் திருகுருகூர் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இந்த தலத்தின் பெருமாள், சாதி ஏற்றத்தாழ்வுகளை அகற்றி பக்தர்களை அரவணைக்கும் சிறப்புக்குரியவர்.

முற்காலத்தில் ஒரு முனிவரின் வேத பாடசாலையில் மந்தன் என்பவன் மாணவனாக பயின்று வந்தான். அவன் அதிக திமிர் பிடித்தவன் என்பதால் வேதங்கள் கற்பதில் ஆர்வம் காட்டாமல், வேதம் பயின்ற பிற மாணவர்களையும், வேதம் கற்பித்த ஆசிரியர்களையும் நிந்தனை செய்து வந்தான்.

இதனால் வெகுண்ட குரு 'மந்தனே நீ அடுத்த பிறவியில் புலையனாக பிறக்கக்கடவாய்' என சாபமிடுகிறார். அப்போதும் சிறிதும் வருந்தாத மந்தன், 'வேதங்களை கற்பதால் மட்டும் இறைவனை அடைந்துவிட முடியாது, அவருக்கு தொண்டு செய்வதன் மூலமும் இறைவனை அடையலாம்' எனக்கூறி அந்த வேதபாட சாலையை விட்டு நீங்கி, அங்கிருந்த விஷ்ணு கோவிலை அடைந்து அக்கோவிலை சுத்தப்படுத்தி, செப்பனிட்டு, தொண்டுகள் பல செய்து வாழ்வை கழித்தான்.

மறுபிறவியில் குருவின் சாபத்தால் தாந்தன் என்னும் பெயரில் புலையனாக பிறப்பெடுத்தான். முற்பிறவியில் விஷ்ணு கோவிலுக்கு தொண்டுகள் செய்த காரணத்தால் புலையனாக பிறந்தாலும் நல்ல ஒழுக்க சீலனாகவும், சிறந்த பக்திமானாகவும் விளங்கினான் தாந்தன். அவன் இந்த ஆதிபுரிக்கு வந்தபோது, ஆதிநாத பெருமாளை தரிசிக்க செல்கையில், புலையன் என்பதால் உள்ளே செல்ல அந்தணர்களால் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வருந்திய தாந்தன் ஆதிநாதரை வழிபடும் பொருட்டு வேள்வி ஒன்றை செய்ய எண்ணி வேள்வி சாலை அமைத்தான். அங்கும் அந்தணர்கள் வந்து அவனுக்கு இடையூறு செய்தனர்.

இதனால் வருந்திய தாந்தன் பெருமாளிடம் முறையிட, அவனுக்கு இடையூறு செய்த அந்தணர்களின் கண்கள் பார்வையிழந்து போகும்படி பெருமாள் செய்கிறார். அப்போது வானில் ஓர் குரல் 'தாந்தன் என் பக்தன், அவனுக்கு இடையூறு செய்பவர்கள் என் தண்டனைக்கு ஆளாவார்கள்' என்று அசிரீரியாக ஒலித்தது.

இதனால் மனம்திருந்திய அந்தணர்கள் தாந்தனிடம் சென்று மன்னிப்பு கேட்க, அந்தணர்கள் இழந்த பார்வையை மீண்டும் பெற்றனர். அப்போது பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்து, முன்ஜென்ம சாபத்தினை போக்கி தாந்தனுக்கு முக்தியளித்தார். இந்த வரலாற்றை விளக்கும் வண்ணம் ஆதிநாதர் கோவில் படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டு உள்ளது. தாந்தன் ஆதிநாதரை வழிபட்ட இடம் அப்பன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வானது, சாதி ஏற்றத்தாழ்வுகள் என்பது இறைவனுக்கு இல்லை என்பதை உணர்த்துகிறது.


Next Story