திருமலையில் 8-ம் தேதி கருட சேவை.. விரிவான ஏற்பாடுகள்: தேவஸ்தான அதிகாரி ஆய்வு


திருமலையில் 8-ம் தேதி கருட சேவை.. விரிவான ஏற்பாடுகள்: தேவஸ்தான அதிகாரி ஆய்வு
x

கருடசேவை நாளில் 2 மலைப்பாதைகளிலும் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 4-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக 8-ம்தேதி கருட சேவை நடக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், கருட சேவைக்கான அனைத்துத் துறைகளின் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, திருமலையில் உள்ள கோகுலம் ஓய்வு இல்லத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

மேலும், பக்தர்களுக்கான தங்குமிடங்கள், அன்னப்பிரசாத வினியோகம், போலீஸ் பாதுகாப்பு, ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், ஆம்புலன்சுகளை தயார் நிலையில் வைத்தல், பக்தர்களின் போக்குவரத்து, வாகன நிறுத்தம், தடுப்புகள் போன்றவற்றை விரிவாக ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கருட சேவையைப் பார்க்கும் பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் அமரலாம். அங்கு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். கேலரிகளில் நுழையும் வாயில், வெளியேறும் வாயில்களை அதிகாரிகள் வசதியாக அமைக்க வேண்டும்.

பிரம்மோற்சவ விழாவைப் பார்க்க அதிக அளவில் பக்தர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பக்தர்களின் நலன் கருதி, முதியவர்களுக்கான சிறப்பு தரிசனம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் மற்றும் சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனம் உள்பட அனைத்து சிறப்பு தரிசனங்களும், அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

7-ம் தேதி இரவு 9 மணியில் இருந்து 9-ம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தேவஸ்தான அதிகாரி சத்தியநாராயணா மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story