தூங்கிக் கொண்டே படிக்கலாம்


தூங்கிக் கொண்டே படிக்கலாம்
x

'படுத்துக்கிட்டே படிக்காதே... மனசுல பதியாது' என்றுதான் அப்பா, அம்மா அதட்டிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், படுத்துக் கொண்டு மட்டுமல்ல... நன்றாகத் தூங்கிக் கொண்டே கூட படிக்கலாம், தாராளமாக மனதில் பதியும் என்கிறது ஒரு ஆராய்ச்சி.

விஷயத்தை இன்னும் விவரமாகப் பார்ப்போம்...

ஒருவர் ஆழ்ந்து உறங்கும்போது, பக்கத்தில் யாராவது பேசினால் அதை அவர் அறிய முடியுமா என்ற ஆராய்ச்சி பல காலமாக நடந்து வருகிறது. அறிவியல் ரீதியாக இதை நிரூபிக்கும் நோக்கில்தான் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இப்படியொரு ஆராய்ச்சியைச் செய்தார்கள்.

ஆராய்ச்சி ரொம்ப சிம்பிள்தான். தூங்கும் அறை முழுக்க ஒலிபெருக்கிகள் இருக்கும். கட்டிலில் படுத்திருப்பவர் ஆழ்ந்து உறங்குவதை, நவீன சென்சாரின் உதவியால் உறுதி செய்த பின்பு, அந்த ஒலிபெருக்கிகள் உயிர் பெறும். அதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட குரல்-ஒரு ஆசிரியர் நடத்திய பாடத்தின் ஒலிச்சித்திரம்- ஒலிக்கத் தொடங்கும்.

இதற்கு முன்பு கூட இதே மாதிரியான ஆராய்ச்சிகளைச் செய்து விட்டு, உறங்குபவர் மண்டையில் எதுவும் ஏறவில்லை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஆராய்ச்சிக் குழு ஒலிபெருக்கியின் குரலோடு வாசனைகளையும் ஆய்வில் சேர்த்துக் கொண்டன. அதாவது, பாடத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் வரும்போது அந்த அறை எங்கும் அற்புத நறுமணத்தைப் பரவ விடுவார்கள். வேறு சில வார்த்தைகளுக்கு அருவருக்கத்தக்க நாற்றத்தைப் பரப்புவார்கள். இப்படி ஒவ்வொரு முக்கியமான வார்த்தைக்கும் ஒவ்வொரு வாசனை.

இந்த முறை மூலம் பாடத்தைப் பயிற்றுவித்தால், தூக்கத்தில் பாடம் கேட்டவருக்கு கேள்வி பதில்கள் வரிக்கு வரி நினைவில் இல்லையென்றாலும் கூட, அந்தந்த வார்த்தைகளோடு சேர்ந்து வந்த வாசனையின் நினைவு வந்ததாம்.

''இதன் மூலம், உறங்கும்போது கூட ஒருவரின் காதுகளும், நாசிகளும், மூளையும் விழிப்பு நிலையில்தான் உள்ளன. அவற்றால் நிச்சயமாக கல்வி கற்க முடியும் என்பது தெளிவாகி இருக்கிறது'' என்கிறார் இந்த ஆய்வின் தலைமை விஞ்ஞானியான நோம் சோபல்.

உறக்கம் எப்படி நிகழ்கிறது என்ற உண்மை இன்னமும் தெளிவுபடவில்லை. தூங்கும்போது செய்திகள் மூளையை எப்படி அடைகின்றன என்பது பற்றியும் விஞ்ஞானிகள் இன்னமும் விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆயினும் நல்ல தூக்கத்தில் இருந்தாலும் மூளைக்குள் செய்திகள் புகுந்து விடுவதை இந்த ஆய்வு உறுதி செய்திருக்கிறது.


Next Story