உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்


உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்
x

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் முயற்சி செய்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பு பல விதமான நோய் பாதிப்புகளுக்கு ஆளாக்குவதால் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உணவு வகைகளை சாப்பிடுவதிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்கள். எடையை குறைப்பதற்கு உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்குவது அவசியம். அதற்கு குறிப்பிட்ட உணவு வகைகளை அன்றாட உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

* குடை மிளகாயில் இருக்கும் வைட்டமின் சி, உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. 100 கிராம் குடைமிளகாயில் 50 கலோரிகள் இருக்கிறது.

* ஆப்பிள் பழத்தில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை. அதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையையும் சீராக பராமரிக்கலாம்.

* முட்டைக்கோசில் இருக்கும் வைட்டமின்களும், தாதுக்களும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை. மேலும் அதில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்க துணை புரியும்.

* கீரைகளில் இரும்பு சத்து, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

* காளான்களை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். அவை வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு மற்றும் அதிக கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும். காளான்களை சூப்பாகவோ, வேக வைத்தோ சாப்பிடலாம்.

* கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. அவை உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றி உடல் எடை குறைப்புக்கு வழிகோலும்.


Next Story