வாழ்க்கையை அழகாக்கும் அழகுக்கலை..!


வாழ்க்கையை அழகாக்கும் அழகுக்கலை..!
x

அழகுக்கலை பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்ட அழகுக்கலை படிப்புகளைப் பற்றி ஹர்சிதா தேவி விளக்குகிறார்.

சில நேரங்களில் பட்டப்படிப்புகளை விட எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக இருக்கின்றன டிப்ளமோ படிப்புகள். குறிப்பாக அழகுக்கலை உள்ளிட்ட சில குறிப்பிட்ட டிப்ளமோ படிப்புகள் வேலைவாய்ப்புடன், சுயதொழில் வாய்ப்புகளையும் கொண்டுள்ளன. அப்படி பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்ட அழகுக்கலை படிப்புகளைப் பற்றி ஹர்சிதா தேவி விளக்குகிறார்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவரான இவர், சுயமாகவே அழகுக்கலை பயின்று, பிறகு முறையாக பயின் றவர். இப்போது அழகுக்கலை படிப்பு சம்பந்தமான வழிகாட்டுதல், அழகு நிலையம் அமைத்தல் போன்ற வழிகாட்டுதல்களை இலவசமாக வழங்கி வருகிறார்.

''ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டு வரும் தொழில்களில் அழகுக்கலைக்கு முதலிடம் உண்டு. சராசரியாக ஆண்டுக்கு 20 சதவீதம் என்ற அளவில் அதிக வளர்ச்சி கண்டுவருகிறது இந்த தொழில்துறை. அனைவரும் கல்வியறிவு பெற்று வரும் இந்த சமுதாயத்தில், தங்களை நாகரிகமாக காட்டிக் கொள்ள விரும்பும் பழக்கமும் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் கூட நாகரிக வளர்ச்சி, உடல் அழகு பேணும் போக்கு மேம்பட்டுக்கொண்டுதான் வருகிறது. எனவே ஆங்காங்கே அழகு நிலையங்கள் முளைத்து வருவதை கண்கூடாக காணலாம்'' என்றவர், அழகுக்கலை பயிற்றுவிக்கும் படிப்புகளை பகிர்ந்து கொண்டார்.

''இளைஞர்களும், இளம் பெண்களும் விதவிதமான ஸ்டைல்களில் சிகை அலங்காரம், முக அலங்காரம் செய்து கொள்ள பெரிதும் விரும்புகிறார்கள். டாட்டு வரைதல், நவீன உடை அணிதல் என அவர்களின் அழகுப் பண்புகள் மெருகேறி வருகின்றன. எனவே அழகுக்கலை படிப்புக்கும் வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. இப்படி வாய்ப்புகள் நிறைந்த அழகுக்கலை படிப்பில் பல பிரிவில் டிப்ளமோ வகுப்புகள் உள்ளன. பட்டப்படிப்புகள் வழங்கும் கல்வி நிறுவனங்களும் உள்ளன.

6 மாதம் முதல் 3 வருடம் வரை பல படிப்புகள் உள்ளன. பியூட்டிசியன், காஸ்மெடாலஜி, பியூட்டி கல்ச்சர், மேக்கப், ஹேர் டிசைனிங், நெயில் ஆர்ட், நியூட்ரிஷியன், ஸ்கின் தெரபி, பியூட்டி தெரபி, ஸ்பா தெரபி, ஹைடெபினிசன் மேக்கப், பேஷன் மேக்கப், போர்டோபோலியோ மேக்கப், ஏர் பிரஸ் டெக்னிக்ஸ், கரக்சன்ஸ் அண்ட் ஸ்கல்ப்டிங், பிரைடல் அண்ட் டிரெடிசனல் மேக்கப், மேக்கப் கன்சல்டேசன், செல்ப் குரூமிங், கார்ப்பரேட் குரூமிங் என படிப்புகளின் உட்பிரிவுகள் நீளும்.

அரசு கல்வி நிறுவனங்களில் குறைந்த செலவில் இந்த படிப்புகளை படிக்க முடியும். பயிற்சி முடிய நீண்ட காலம் பிடிக்கும். அனைத்து விஷயங் களையும் ஆழமாக படித்து அறிய முடியும். ஆனால் தனியார் பயிற்சி மையங்களில் குறைந்த காலத்திலேயே இந்த தொழிற்கல்வியை கற்றுக்கொடுத்து விடுகிறார்கள்'' என்றவர், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்ற அழகுக்கலை பயிற்சி மற்றும் படிப்புகளை தேர்ந்தெடுக்க வழிகாட்டி வருகிறார். ''அழகுக் கலை என்பது வெறுமனே நகப்பூச்சு போடுதல், மெழுகுப்பூச்சு போடுதல், கூந்தலை சரி செய்தல் என்பது மட்டுமல்ல. முகத்தை அழகு படுத்துதல், சருமத்தை சீர்படுத்துதல், ஊட்டச்சத்து மேம்பாடு, உடை மேம்பாடு, விருந்தோம்பல் முறை என பலவற்றைப் பற்றியும் படிக்கும் வாய்ப்பு உண்டு. அழகுக்கலை படிப்பை முடித்ததும் உங்கள் கையில் ஒரு தொழில் இருப்பதாக பெருமிதம் கொள்ளலாம். கொஞ்சம் வசதி இருந்தால் நீங்களாகவே அழகுக்கலை மையம் தொடங்கி விடலாம். சுயதொழில் கடன் பெறும் வாய்ப்புகளும் உள்ளது. அழகுக்கலை படித்த இல்லத்தரசிகள் நகர்ப்புறங்களில், வீட்டிலேயே தங்களுக்கு தெரிந்த நட்பு வட்டாரத்திற்கு மட்டும் அலங்காரம் செய்து, வீட்டுச் செலவை கவனித்துக் கொள்வதும் உண்டு.

சுயதொழில் வாய்ப்பு மட்டுமல்லாமல் அழகுக் கலை படிப்பு படித்தவர்களுக்கு பல துறைகளிலும் வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக மருத்துவமனைகள், விமான நிறுவனங்கள், தொலைக்காட்சி நிலையங்கள், மாடலிங் துறை, சினிமாத் துறை, பொழுதுபோக்கு மற்றும் கலைத்துறை என பல துறைகளிலும் வாய்ப்புகள் உள்ளன. அழகுக்கலைத் துறையில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதிக மதிப்பெண் எடுத்து சாதிக்க முடியவில்லை என்பவர்கள், எளிதாக கற்கவும், கை நிறைய சம்பாதிக்கவும் ஏற்ற படிப்பாக அழகுக்கலை படிப்புகள் விளங்குகின்றன. நீங்களும் விரும்பினால் அழகுக் கலை படிப்புகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்'' என்றவர், அழகுக்கலை பயின்று தொழில் தொடங்க ஆசைப்படுபவர்களுக்கு வழிகாட்டுகிறார்.

''இன்றைய சூழலில் இது நல்ல லாபம் தரக்கூடிய தொழில். இதன் தேவை அதிகம். இந்தத் தொழிலை அரசு மானியத்துடன் (UYEGP ரூ.3 லட்சம், PMEGP ரூ.5 லட்சம்) கடன் பெற்றுத் தொழில் தொடங்கலாம்.

திரெட்டிங், வாக்சிங், பிளீச்சிங் (Bleaching), பேசியல் (Facial), முடி மற்றும் சிகை அலங்காரம் (Hair and hairstyle), மெகந்தி (Mehandi), கலரிங் (Colouring), மெனிக்யூர் (Manicure), பெடிக்யூர் (Pedicure) மற்றும் மணப்பெண் அலங்காரம் (Bridal Make-up) பள்ளி நாடக நாட்டிய அலங்காரம் முதலியவை சேவைக்கலை ஆகும். இந்தத் துறைக்கு வருகிறவர்கள், அரசு சான்றிதழ் பெற்ற கல்வி நிலையங்களில் சேர்ந்து, நன்கு படித்துவிட்டு ஆரம்பிப்பதுதான் நல்லது. அப்போதுதான் உத்தரவாதத்துடன் இந்தத் துறையில் முன்னேற முடியும். இதில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் நீங்களும் அழகுக்கலை நிபுணராக வலம் வரலாம்'' என்ற நம்பிக்கை வரிகளுடன் விடைபெற்றார்.

அழகுக் கலை என்பது வெறுமனே நகப்பூச்சு போடுதல், மெழுகுப்பூச்சு போடுதல், கூந்தலை சரி செய்தல் என்பது மட்டுமல்ல. முகத்தை அழகு படுத்துதல், சருமத்தை சீர்படுத்துதல், ஊட்டச்சத்து மேம்பாடு, உடை மேம்பாடு, விருந்தோம்பல் முறை என பலவற்றைப் பற்றியும் படிக்கும் வாய்ப்பு உண்டு.


Next Story