என்ஜினீயரிங் கல்வியை மெருகேற்றும் கூடுதல் படிப்புகள்..!


என்ஜினீயரிங் கல்வியை மெருகேற்றும் கூடுதல் படிப்புகள்..!
x

பொறியியல் படிப்பிற்கு என்றுமே வரவேற்பு உண்டு. அதேசமயம், பொறியியல் படிப்போடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல், அதனுடன் சேர்த்து கூடுதல் படிப்புகளையும் கற்றுக்கொள்ளும்போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் தொடக்க 2 வருடங்களில் ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல், தொடர்பு கொள்ளுதல் போன்ற மொழி சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம். இவற்றுக்கென தனிப் பயிற்சியாகவோ, இணையத்தில் கிடைக்கும் வீடியோக்கள் உதவியுடனோ தயாராகலாம். பின்னர் படிப்படியாகத் துறைசார் கூடுதல் படிப்புகள், தொழில் பயிற்சிகளில் இறங்கலாம்.

சமூக வலைத்தளங்கள், யூடியூப் வாயிலாகவும் படிப்பு சார்ந்த தொழில்நுட்பக் கருத்துகளைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளலாம். இந்த முயற்சிகள் படிப்பில் ஈடுபாட்டையும், சுவாரசியத்தையும் கூட்டும்.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும், படிப்பை முடித்தவர்களுக்கும் பொறியியல் துறையின் பின்னணியில் அவசியமான படிப்புகளையும், தொழில் பயிற்சிகளையும் பார்க்கலாம்.

* சிவில் துறை

கட்டுமானம், வடிவமைப்பு தொடர்பான கணினி படிப்புகள் சிவில் மாணவர்களுக்கு அடிப்படையானவை. ஆட்டோ கேட், டிசைன் விஸ்வலைசேஷன் புரோ, ஸ்டாட் புரோ, ரிவிட் ஆக்கிடெக்சர், ரிவிட் மெப்... உள்ளிட்டவை இந்தப் படிப்புகளில் அடங்கும். மேலும், பில்டிங் எஸ்டிமேஷன், காஸ்டிங், கம்ப்யூட்டர் எய்டட் லேண்ட் சர்வே போன்றவை அத்தியாவசியமான படிப்புகளாகும். கட்டுமான விபத்துகள், தீ அபாயங்கள், முதலுதவி பயிற்சி போன்றவை கூடுதல் திறனில் அடங்கும்.

பன்னாட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளின் பணி வாய்ப்புகளில் இவை கைகொடுக்கும். கல்லூரி படிப்பின் நிறைவாக குறுகிய காலச் சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பாக இன்டீரியர் டிசைனிங், கன்ஸ்ட்ரக்ஷன் சூப்ரவைசர் பயிற்சிகளை பெறலாம்.

* தகவல் தொழில்நுட்பம், கணினித் துறைகள்

பொதுவாகவே எல்லோருக்கும் புரோகிராமிங் லாங்குவேஜ் படிப்புகளான சி மற்றும் சி++ அவசியம். அதிலும் ஐ.டி., கணினி, எலெக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் இந்தப் படிப்புகளில் முறையான சான்றிதழ் பெற்றிருப்பது வேலைவாய்ப்பில் அனுகூலம் தரும்.

மைக்ரோசாப்ட் எக்ஸல், அக்சஸ், எஸ்.கியூ.எல் போன்றவற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தேர்வின் வாயிலாகச் சான்றிதழ் பெறுவது ஒரு வகை. மேலும் வெப்டிசைனிங் தொடர்பான ஹெச்.டி.எம்.எல், ஜாவா ஸ்கிரிப்ட், ஏ.எஸ்.பி.நெட், எஸ்.இ.ஓ., பி.ஹெச்.பி., மைஸ்கூல் உள்ளிட்டவற்றையும் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் தொடர்பான அடிப்படைப் பயிற்சியையும் அடுத்தடுத்து மேற்கொள்ளலாம்.

ஐ.டி மாணவர்கள் தகவல் பாதுகாப்பு மற்றும் எத்திகல் ஹாக்கிங் குறித்த சான்றிதழ் படிப்பு மேற்கொள்ளலாம். ஓபன் சோர்ஸ் டெக்னாலஜி குறித்த குறுகிய காலப் படிப்பைத் தரமான நிறுவனத்தின் வாயிலாகப் பெறலாம். ஆர்வத்தின் அடிப்படையில் அனிமேஷன், மல்டி மீடியா, ரோபாடிக்ஸ் துறைகளின் அடிப்படையைத் தொழில் பயிற்சியாகப் பெறலாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங், இ-காமர்ஸ் தொடர்பான படிப்பு களையும் இணையம் வாயிலாகவே பெறலாம்.

* எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த துறைகள்

எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பணி வாய்ப்புகளுக்கு எஸ்.எம்.டி எனப்படும் Surface Mount Device பயிற்சி அவசியம். மேலும் மொபைல் போன் தளத்தில் டெஸ்டிங், டெவலப்மெண்ட், அப்ளிகேஷன்ஸ் சார்ந்த தொழில்நுட்பப் பயிற்சிகளை பெற்றிருப்பது அவை சார்ந்த பணி வாய்ப்புகளுக்கு உதவும். எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மாணவர்கள் எம்பிட் சிஸ்டம், பி.சி.பி.டிசைனிங் மற்றும் வி.எல்.எஸ்.ஐ. படிப்புகள், சி.சி.என்.ஏ., சி.சி.என்.பி. போன்ற சிஸ்கோ சான்றிதழ் படிப்புகள் போன்றவற்றையும் அடுத்தடுத்து மேற்கொள்ளலாம்.

* மெக்கானிக்கல் துறைகள்

மெக்கானிக்கல் படிப்பை முடித்தவர்கள் எஸ்.கியூ.எல். மற்றும் எஸ்.பி.சி. பயிற்சிகள், சிக்ஸ் சிக்மா, 5-எஸ் சான்றிதழ் போன்ற குறுகிய காலப் படிப்புகளைத் தொடரலாம். ஆட்டோமொபைல் துறைக்கு என்.எக்ஸ். கேட், கேம், நாஸ்ட்ரான் போன்ற மென்பொருள் படிப்புகள் அவசியம். ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ் மாணவர்கள் டிசைனிங் மற்றும் டெஸ்டி ஆகியவற்றிலும் ஆட்டோமேட்டிங் இன்டீரியர், சாலிட் அண்ட் வைபிரேஷன் டெஸ்டிங் தொடர்பான குறுகிய காலப் படிப்புகளையும் படிக்கலாம்.

* எலெக்ட்ரிக்கல் துறை

எலெக்ட்ரிக்கல் மாணவர்கள் பொதுவாக எஸ்.எம்.டி. சர்வீஸ் பயிற்சி, எலெக்ட்ரிக்கல் ஆட்டோகேட், டிசைனிங் பயிற்சி, எலெக்ட்ரிக்கல் சேப்டி போன்றவற்றை அடிப்படையாக பெறலாம். புரோக்கிராமபில் லாஜிக் கன்ட்ரோலர் பயிற்சிகள் போன்றவற்றை வேலைவாய்ப்பின் அடிப்படையில் கூடு தலாக மேற்கொள்ளலாம். வளரும் தொழில் துறையான சோலார் பேனல் சார்ந்த தொழில் பயிற்சியை அனுபவ அடிப்படையில் பெறுவது சிறப்பு.


Next Story