தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 20 Sep 2024 9:13 AM GMT (Updated: 20 Sep 2024 9:48 AM GMT)

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தாலும், சில இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு, அதாவது இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி முதல் 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story