வாஸ்து குறிப்பிடும் வளர்ப்பு பிராணிகள் வசிப்பிடம்
ஈசானியம் என்ற வடகிழக்கில் வளர்ப்பு பிராணிகளை வைத்து பராமரிப்பது அவற்றை பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும்.
வீடுகளில் நாய், பூனை, பறவைகள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வைத்து பராமரிப்பது பலரது வழக்கம். அவற்றுக்கான தங்குமிடங்களை அமைத்துக்கொள்ள வாஸ்து ரீதியாக பொருத்தமான இடங்கள் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் ஆகும்.
நான்கு திசைகளில் எந்த திசையில் தலைவாசல் இருந்தாலும், அந்த இரு பகுதிகளும் வளர்ப்பு பிராணிகளை வைத்து பராமரிக்க ஏற்ற பகுதியாக அமைகின்றன. கோவில்களில் யானை பராமரிக்கப்படும் இடம், பசு மடம், கோசாலை ஆகியவை அதன்படி அமைக்கப்படுகின்றன.
ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை கிழக்கு மற்றும் தென்கிழக்கு அறைகளில் வசிப்பிடம் அமைத்து பராமரித்தால் அவை அடிக்கடி நோய் வாய்ப்படும் என்று வாஸ்து தெரிவித்துள்ளது.
அதேபோல ஈசானியம் என்ற வடகிழக்கிலும் வளர்ப்பு பிராணிகளை வைத்து பராமரிப்பதும் அவற்றை பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும். வீட்டின் வடகிழக்கு பகுதி சக்தி அலைகளுக்கு ஆதார இடமாகும். அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கும் அந்த சக்தியலை பரவும் நிலையில் அது வளர்ப்பு பிராணிகளின் இயல்பை மாற்றி விடும்.
கிழக்கு அல்லது வடக்கு திசையில் மெயின் கேட் உள்ள வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கான தங்குமிடத்தை வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய திசைகளில் பலரும் அமைக்கிறார்கள். அந்த பகுதிகளும் அவைகளுக்கு பொருத்தமாக குறிப்பிடப்படவில்லை.
ஆன்மிக சாஸ்திர ரீதியாக ஒரு வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு அல்லது தங்களை வளர்ப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய கண் திருஷ்டி, கிரக தோஷங்கள் உள்ளிட்ட எதிர்மறை சக்திகளை தாங்கள் ஈர்த்துக்கொண்டு உடல் நல பாதிப்பை அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, மீன்கள் மிகவும் கூர்மையான உணர்வு பெற்றவையாக இருப்பதால் கண் திருஷ்டி என்ற எதிர்மறை சக்திக்கு அவை முதலில் பலியாகி விடுவதை பலரும் அனுபவ ரீதியாக அறிந்துள்ளார்கள். மீன் தொட்டிகளை வரவேற்பறை அல்லது ஹால் பகுதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் நல்ல வெளிச்சமும், காற்று நீர்க்குமிழிகளும் அதில் செல்லும்படி அமைத்து பராமரித்து வர வேண்டும்.
கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்