மத்திய பட்ஜெட்: ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்


மத்திய பட்ஜெட்: ஒரே ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன்
x

விவசாயிகளுக்கு அடுத்த நிதி ஆண்டில் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்குவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான அறிவிப்புகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அதுபற்றிய விவரங்கள் வருமாறு:-

அடுத்த நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கும் கடன்கள் ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்தப்படும். கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை, மீன் வளம் ஆகியவற்றுக்காக கடன் வழங்குவதில் முக்கியமாக கவனம் செலுத்தப்படும்.

விவசாய ஊக்குவிப்பு நிதியம்

விவசாயத்துக்கு என டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு உருவாக்கப்படும். இது விவசாயம் சம்பந்தப்பட்ட தகவல் சேவைகள், விவசாயிகளை மையமாகக் கொண்ட தீர்வுகளுடன் அமையும். குறிப்பாக பயிர் சாகுபடி திட்டமிடல், விவசாய சாகுபடிக்கான பொருட்கள், கடன், காப்பீடு, பயிர் மதிப்பீட்டுக்கான உதவி, சந்தை நுண்ணறிவு மற்றும் வேளாண் தொழில்நுட்ப தொழில் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கும். விவசாய 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் பெற முடியும்.

விவசாயத்துக்கு என பிரத்யேகமாக விவசாய ஊக்குவிப்பு நிதியம் அமைக்கப்படும். விவசாயிகள் எதிர்கொள்கிற சவால்களுக்கு புதுமையான மற்றும் மலிவான தீர்வுகளை இது கொண்டு வருகிறது. மேலும், விவசாய நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கான நவீன தொழில்நுட்பங்களையும் இது கொண்டு வரும். உற்பத்தி மற்றும் லாபத்தையும் அதிகரிக்கும்.

நோய் இல்லாத தரமான நடவு பொருட்கள் கிடைப்பதற்கான சுய சார்பு தூய்மை திட்டத்தை தொடங்குவோம். தோட்டக்கலை பயிர்களுக்கான இந்த திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

சிறுதானியங்கள்

சிறுதானியங்களை பிரபலப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது, அவற்றின் பயன்பாட்டால் ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் அதிகரிக்கிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

நாம் உலகின் மிகப்பெரிய சிறுதானிய உற்பத்தியாளர்களாக இருக்கிறோம். சிறுதானிய ஏற்றுமதியில் உலக அளவில் 2-ம் இடம் வகிக்கிறோம். நாம் பல வகையான சிறுதானியங்களை உற்பத்தி செய்கிறோம். இவற்றால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த சிறுதானியங்கள் நமது உணவின் ஒருங்கிணைந்த பகுதியாக பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நாம் சிறுதானிய உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுகிறோம். இதில் ஐதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி கழகம், ஆதரவு அளிக்கும். இது, சர்வதேச அளவில் சிறப்பான நடைமுறைகள், ஆராய்ச்சி, தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும்.

மீனவர்களுக்கான திட்டம்

'பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா' என்ற துணைத்திட்டத்தை தொடங்குகிறோம். இதற்கு ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு இருக்கும்.

இது மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், குறு மற்றும் சிறு தொழில்களை மேம்படுத்தும்.

கூட்டுறவு சங்கங்கள் கணினி மயம்

விவசாயிகளுக்கு குறிப்பாக சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு மற்ற விளிம்பு நிலை பிரிவினருக்கு, அரசு கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துகிறது. கூட்டுறவுக்காக புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. ஒத்துழைப்பால் செழிப்பு என்பது இதன் நோக்கம் ஆகும். இதை நனவாக்குவதற்கு, 63 ஆயிரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை ரூ.2,516 கோடியில் கணினிமயமாக்கும் பணியினை தொடங்கி இருக்கிறோம்.

பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள், தொடக்க மீன் பிடி சங்கங்கள், பால் வள கூட்டுறவு சங்கங்களை அடுத்த 5 ஆண்டுகளில் அரசு உருவாக்க வழி வகை செய்யும்.

இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story