மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டு நீட்டிப்பு


மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டு நீட்டிப்பு
x

மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிற வட்டியில்லா கடனை மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் பேசும் போது கூறியதாவது:-

மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிற 50 ஆண்டு கால வட்டியில்லா கடன் வசதி, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த வட்டியில்லா கடனை அடுத்த நிதி ஆண்டுக்குள் 2023-24 மூலதனத்தில் செலவிட வேண்டும். இதில் பெரும்பாலான செலவுகள் மாநிலங்களின் விருப்பப்படி அமையும். ஆனால், அதன் ஒரு பகுதி, மாநிலங்கள் தங்கள் உண்மையான மூலதனத்தை அதிகரிக்க வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும்.

நிபந்தனைகள்

வட்டியில்லா கடனை கீழ்க்கண்ட விதங்களில் பயன்படுத்த வேண்டும்.

* பழைய அரசு வாகனங்களை ஒழித்துக்கட்ட வேண்டும்.

* நகர்ப்புற திட்டமிட்டல், சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள்.

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிதி சீர்திருத்தங்களை உருவாக்குதல்

* போலீசாருக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்துதல்

* யூனிட்டி மால்களை கட்டுதல்

* குழந்தைகள் மற்றும் வளரும் தலைமுறையினருக்கு நூலகங்கள், டிஜிட்டல் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்

* மத்திய அரசின் மூலதன செலவினங்களில் மாநிலங்களின் பங்குக்காக செலவிடலாம்.

இவ்வாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.


Next Story