என்ஜினீயரிங் படிப்புகளுக்கு திடீர் கிராக்கி
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
சென்னை,
பிளஸ்-2 படித்து முடித்து உயர்படிப்புக்கு செல்பவர்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வருகிறது. அரசும், மேல்நிலைக்கல்வியை முடிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் உயர்கல்வியை தொடர வேண்டும் என்ற நோக்கில் பல சலுகைகளை அளித்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிக்கூடங்களில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவப்படிப்பில் மட்டுமல்லாமல், என்ஜினீயரிங் உள்பட அனைத்து தொழிற்கல்வி படிப்புகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கிறது. இதனால் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஏழை-எளிய மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளில் இடம் கிடைத்து அவர்கள் வாழ்விலும் ஒளிவீசுகிறது.
இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு முடிவு கடந்த மே மாதம் 6-ம் தேதி வெளியானதும், கலைக்கல்லூரிகளில் உடனடியாக மாணவர் சேர்க்கை தொடங்கியது. 164 அரசு கலைக்கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துவிட்டது. அரசு கலைக்கல்லூரிகளில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து ஆயிரம் இடங்களில், ஏறத்தாழ 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களிலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இப்போது 2-வது கட்ட மாணவர் சேர்க்கையும் தொடங்கியிருக்கிறது. 4 அரசு ஆடவர் கல்லூரிகளில், மாணவிகளும் சேர்ந்து படிக்கும் வகையில் மாற்றப்பட்டு மாணவிகளும் சேர தொடங்கிவிட்டனர். ஆனால் தனியார் சுயநிதி கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நன்றாகவே இருக்கிறது.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகத்தில் இருந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு திடீர் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இப்போது தமிழ்நாட்டில் ஏறக்குறைய 470 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பல்வேறு படிப்புகளில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மொத்த இடங்களைக் காட்டிலும் விண்ணப்பித்து தகுதியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால், சில குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை பல்கலைக்கழகத்திடம் திரும்பக்கொடுத்த சம்பவங்களும் நடந்தது.
ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை மாறியிருக்கிறது. மொத்த இடங்களைவிட விண்ணப்பித்து தகுதியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்களுக்கு, ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேர் போட்டியிடுகின்றனர். ஆக கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னதாகவே சுமார் 20 ஆயிரம் பேர் காலியிடங்களுக்கு அதிகமாக போட்டிப்போடும் வரிசையில் நிற்கின்றனர். விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால், கலந்தாய்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணும் உயர்ந்துவிட்டது. எனவே முக்கிய பாடப்பிரிவுகள் தேர்வில் இந்த ஆண்டு போட்டிக்கு பஞ்சம் இருக்காது. இவ்வளவு கிராக்கி இருப்பதற்கு காரணம், இப்போது என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு இருப்பதால்தான்.
அதற்கேற்றாற்போல், மத்திய-மாநில அரசுகளின் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், தொழில்நுட்பம் சார்ந்த தனியார் வேலைவாய்ப்புகளிலும் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கிறது. சமீபத்தில் நடந்த டி என் பி எஸ் சி தேர்வு முடிவுகளிலும் என்ஜினீயரிங் துறைச் சார்ந்த பணியிடங்களில் என்ஜினீயரிங் பட்டதாரிகள் நிறைய பேர் தேர்வு பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி வேகம் எடுக்க தொடங்கியிருக்கிறது. இதனால் நிறைய நிறுவனங்கள் முதலீடு செய்யவரும் சூழ்நிலையில், என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு நிறைய இருக்கும் என்பதால், இனி வரும் ஆண்டுகளிலும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு கடும் கிராக்கி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.