10 மாநிலங்களின் கருத்து கிடைக்கவில்லையே..!


Opinions of 10 states are not available..!
x
தினத்தந்தி 9 Aug 2024 12:40 AM GMT (Updated: 10 Aug 2024 12:54 AM GMT)

சமீபத்தில் நிதி ஆயோக்கின் 9-வது கூட்டம் நடந்தது.

சென்னை,

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து திட்டக்குழு அரசாங்கத்துக்கு பக்க துணையாக இருந்தது. திட்டக்குழு அதிகாரம் படைத்த அமைப்பாக இல்லாவிட்டாலும் மத்திய அரசாங்கத்துக்கு பல அரிய ஆலோசனைகளை கூறும் அமைப்பாக இருந்தது. மத்திய அரசாங்கம் தன் கொள்கைகளை வகுக்க திட்டக்குழுவின் பரிந்துரைகள் பேருதவியாக இருந்தது. 2014-ல் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா ஜனதா அரசாங்கம் பொறுப்பேற்றதும் திட்டக்குழு அமைப்பு கலைக்கப்பட்டது.

அதற்கு மாற்றாக 'நிதி ஆயோக்' என்ற பெயரில் இந்தியாவை மாற்றியமைப்பதற்கான தேசிய நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த 'நிதி ஆயோக்' திட்டக்குழு பணிகளைத்தான் செய்தது. இதன் தலைவராக பிரதமர் செயல்படுகிறார். ஆட்சி மன்றத்தின் துணை தலைவராக இப்போது சுமன் பெரி பணியாற்றுகிறார். இதன் அலுவல்சாரா உறுப்பினர்களாக மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், அர்ஜுன் முண்டா ஆகியோர் உள்ளனர். இதுதவிர, சில மந்திரிகள் சிறப்பு அழைப்பாளர்களாக இருக்கிறார்கள். மேலும், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஆட்சி மன்ற குழுவில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்-மந்திரிகள் இருக்கிறார்கள். நிதி ஆயோக்கின் கூட்டம் என்பது நாட்டின் பாதையை சீரமைக்கும். அந்த வகையில், சமீபத்தில் நிதிஆயோக்கின் 9-வது கூட்டம் நடந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டம் நரேந்திரமோடியின் 3-வது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டுக்கு பிறகு நடந்த முதல் கூட்டமாகும்.

இந்த கூட்ட தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது என்று காரணம் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார். தமிழகத்தை பின்பற்றி கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, இமாசலபிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட், டெல்லி மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் கலந்துகொள்ளவில்லை. பா ஜனதா கூட்டணியில் உள்ள புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியும், "பட்ஜெட்டில் தங்களுக்கு ஒரு அறிவிப்பும் இல்லை" என்று கூறி கூட்டத்தை புறக்கணித்தார். பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக 2 துணை முதல்-மந்திரிகள் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சி அரசாங்கத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மட்டும் கலந்துகொண்டார். ஆனால், அவரும் தனக்கு 5 நிமிடம் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டது, 5 நிமிடங்கள் ஆனதும் மைக் 'ஆப்' செய்யப்பட்டது. தன் கருத்துக்களை முழுமையாக கூற முடியவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார். ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு மட்டும் 20 நிமிடங்கள் பேச அனுமதி வழங்கப்பட்டது. அசாம், கோவா, சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரிகளுக்கு 10 முதல் 12 நிமிடங்கள் வரை பேச நேரம் கொடுக்கப்பட்டது என்று குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மறுத்தாலும் மம்தா பானர்ஜி ஒரு மூத்த முதல்-மந்திரி என்ற வகையில், அவருக்கு உரிய நேரம் கொடுக்கப்பட்டு இருக்கவேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இது ஒருபக்கம் இருக்க, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இவரைத் தவிர வேறு எந்த முதல்-மந்திரியும் கலந்துகொள்ளாததும் 10 மாநில முதல்-மந்திரிகளின் குரல் ஒலிக்காததும் ஒரு பெரிய குறையாகும்.


Next Story