புதிய ரெயில்வே திட்டங்கள் வர வேண்டும்


புதிய ரெயில்வே திட்டங்கள் வர வேண்டும்
x
தினத்தந்தி 4 July 2024 10:34 AM IST (Updated: 4 July 2024 10:37 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் இப்போது வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிட்டதால், எங்கும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் விபத்துகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து மக்கள் மீள்வதற்கு பொது போக்குவரத்து அதிகமாக இருக்க வேண்டும் என்பது உலக நியதி. பெரிய நகரங்களில் மெட்ரோ ரெயில்சேவை இருந்தால் மோட்டார் வாகனப்போக்குவரத்தை குறைத்து, மக்கள் பயணம் வசதியாகவும், விரைவாகவும் இருக்கும், நெரிசலும் இருக்காது என்ற வகையில், மெட்ரோ ரெயில் போக்குவரத்து இப்போது பிரபலமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் மெட்ரோ ரெயில் 55 கிலோ மீட்டரில் இயங்குகிறது. இந்த முதற்கட்ட மெட்ரோ ரெயில்திட்டம் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டது. இடம்கொடுப்பது மாநில அரசுதான். சென்னை போன்ற பெருநகரத்தில் இந்த முதற்கட்ட மெட்ரோ ரெயில்சேவை போதாது. இன்னும் 2-ம் கட்டம், 3-ம் கட்டம் என்று மேலும் பல கட்டங்களாக இந்த திட்டத்தை நிறைவேற்றினால்தான், சென்னை நகரை மட்டுமல்லாமல், புறநகர் பகுதிகளையும் இணைக்கமுடியும். அதனால்தான் கடந்த 2021-2022-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணியை ரூ,63ஆயிரத்து 246 கோடி செலவில் மத்திய அரசாங்க திட்டமாக அறிவித்திருந்தார்.

21-11-2020 அன்று சென்னையில் இந்த திட்டத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் போல அடிக்கல் நாட்டியதோடு சரி, அதற்கு மேல் ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை. ஏன் இந்த தாமதம்? என்பதை டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த மாநில நிதி மந்திரிகள் மாநாட்டில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புட்டு புட்டு வைத்தார். இந்த திட்டம் 17-8-2021 அன்று திட்ட முதலீட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபைக்குழுவின் ஒப்புதலுக்காக கடந்த 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது. இருந்தாலும், இந்த திட்டத்துக்கான முழுசெலவீனமும் தமிழக அரசின் சொந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுவதால் கடும் நிதிச்சுமை ஏற்படுகிறது. உடனடியாக இந்த திட்டத்துக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலேயே போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அந்த கூட்டத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.

இதுபோல தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை வழித்தடம், திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி-ஓசூர் புதிய ரெயில்பாதை வழித்தடம், அருப்புக்கோட்டை வழியாக 143.5 கி.மீ. தூரத்துக்கான மதுரை-தூத்துக்குடி ரெயில்பாதை திட்டம், மீஞ்சூர்-திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம்-சிங்கப்பெருமாள் கோவில்-மதுராந்தகம் ரெயில்பாதை, சேலம்-ஓசூர்-பெங்களூரு மற்றும் கோவை-எர்ணாகுளம் நீட்டிப்புகளுடன் கூடிய சென்னை, சேலம், கோவை ஆகிய இடங்களை இணைக்கும் மித அதிவேக ரெயில் வழித்தடம் ஆகிய திட்டங்களுக்கு வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம் பி க்களுக்கும் வேலை காத்திருக்கிறது. இந்த திட்டங்களுக்கெல்லாம் ஒப்புதல்தர வேண்டும் என்று அவர்களும், தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களும், பிரதமர் நரேந்திரமோடி, நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை நேரில் சந்தித்து மட்டுமல்லாமல், அவையில் நடக்கும் விவாதங்களிலும் வலியுறுத்தி பேசி இந்த திட்டங்களுக்கு ஒப்புதலை பெறவேண்டும்.


Next Story