கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கியது

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கியது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 2015-ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு 9-வது கட்ட அகழாய்வு பணிகள் முடிவு பெற்று, தற்சமயம் 10-வது கட்ட பணிகள் நடைபெறுகிறது. இதில், முதல் மூன்று கட்டங்கள் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்றது.
அடுத்த ஏழு கட்ட அகழாய்வு பணிகள் மாநில அரசின் தொல்லியல் துறை மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் பற்றிய வாழ்க்கை முறைகள், பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் பற்றி கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அதில் முக்கிய பொருட்கள் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந் தேதி ரூ.17.80 கோடி மதிப்பீட்டில் அகழாய்வு நடந்த இடத்திலேயே 5,914 சதுர மீட்டர் பரப்பளவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன் ஆகியோர் கடந்த 16-ந் தேதி தொடங்கி வைத்தனர். அன்றிலிருந்து பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்த இடங்களை முதலில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்ற கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் ஆகியோர் தலைமையில் தொல்லியல் ஆய்வு மாணவர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழக தொல்லியல் துறையினர் ஒவ்வொரு கட்டமாக அகழாய்வு பணிகள் நிறைவு செய்யும்போது வெளிப்பட்ட பொருட்களை பாலித்தீன் தார்பாய்கள் கொண்டு மூடி அதன் மீது மண்ணை கொட்டி குழிகளை மூடி இருந்தனர்.
தற்சமயம் மீண்டும் பொருட்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர குழிகளை தோண்டி மண்ணை அகற்றும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குழியின் உள்ளே இருந்து பொருட்களை பாதுகாப்பாக வெளியே எடுத்த பின்பு அவற்றை சுற்றி கட்டிட பணிகளை தொடங்கவும் தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.