பசுமை வண்ணத்தில் மர சிற்பம்... புதுமை புகுத்திய பெண்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மரசிற்பங்கள் உற்பத்திக்கு புகழ் பெற்றதாகும். கள்ளக்குறிச்சி அண்ணாநகர், தென்கீரனூர், தகடி, கூத்தனூர், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு மேலாக மரசிற்பங்கள் தயாரிக்கும் தொழிலில் கலைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த மரசிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு கடந்த 5.7.2013 அன்று விண்ணப்பிக்கப்பட்டது. இதை அரசு பரிசீலனைக்கு எடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி கள்ளக்குறிச்சி மரசிற்பத்துக்கு புவிசார் குறியீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சூழலில் பல குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியில் பெண்கள் தான் முதுகெலும்பாக இருக்கிறார்கள். கற்ற கல்வியால் ஆண்களுக்கு நிகராக உயர்ந்து வருகிறார்கள். அதே வேளையில், கல்வி கற்காத கிராமப்புற பெண்களும் சிறு தொழில் முனைவோராக அவதாரம் எடுத்து அசத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஊன்றுகோலாக சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.
நம்மில் பலரும் சுய உதவிக்குழு என்றால் குடும்ப தலைவிகளுக்கு அவசர காலங்களில் கடன் வழங்கி உதவிக்கரம் நீட்டும் அமைப்பாகத்தான் அறிந்திருப்போம். ஆனால், சுய உதவி குழுவினர் எண்ணினால், எட்ட முடியாத உயரம் என்று எதுவும் இல்லை என்பதை நிரூபணம் செய்து காட்டி இருக்கிறார்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்கீரனூரை சேர்ந்த சுயஉதவி குழுவினர்.
இவர்கள் தேர்வு செய்த சிறுதொழில், இந்த மாவட்டத்தின் அடையாளமான மரசிற்ப கலை. ஏற்கனவே இந்த சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த சிற்பங்கள் மக்களிடையே சென்றடையாததால், இத்தொழிலை சார்ந்து இருந்த கலைஞர்கள் பலரும் கூலிவேலை போன்ற மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டார்கள்.
தங்கள் வீட்டு ஆண்கள் கைவிட்ட மர சிற்ப தொழிலை, இவர்கள் தைரியமாக கையில் எடுத்து அதில் புதுமை புகுத்தி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறார்கள். கூடவே இப்பிரபஞ்சத்துக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தவிர்க்க அதற்கு மாற்று பொருட்களையும் தயார் செய்து, அசத்தி வருகிறார்கள். தங்கள் மகளிர் குழு முன்னெடுத்திருக்கும் இந்த மர சிற்ப கலை பற்றி அதன் தலைவியான ஆர்.லட்சுமி பகிர்ந்து கொண்ட விஷயங்கள்...
உங்களை பற்றி?
நான் 8-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனது கணவர் ராஜா கூலிவேலை செய்து வருகிறார். எங்கள் சுய உதவி குழுவை சேர்ந்த 30 பேர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சங்கல்ப் திட்டத்தின் கீழ் மரக்கடைசல் பொருட்கள் தயாரிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றோம். பயிற்சியை நாங்கள் 24 பேர் முழுமையாக நிறைவு செய்து, தற்போது பல்வேறு வகையிலான மர சிற்பங்களை உற்பத்தி செய்து, அதற்கு இயற்கையான பொருட்களில் இருந்து கிடைத்த வண்ணங்களை பூசி விற்பனை செய்து வருகிறோம்.
மர சிற்பங்கள் தயார் செய்யும் தொழில் மீது உங்கள் குழுவுக்கு ஈடுபாடு வரக் காரணம் என்ன?
எங்கள் பகுதியில் ஆண்கள் மரத்தால் ஆன சாமி சிலைகள் செய்வார்கள். நாங்கள் அங்கு கூலி வேலைக்கு சென்று, சிலை தயாரிக்க பயன்படும் மரப்பலகைகளுக்கு மெருகு ஏற்றும் வகையில் உப்புத்தாள் தேய்த்து வந்தோம். அப்போது தான் நாமும் இந்த தொழிலை செய்தால் என்ன என்ற எண்ணம் உதித்தது. இதையடுத்து நாங்கள் 30 பேர் கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து, அதற்கான உதவியை செய்து தருமாறு கேட்டோம். அவரும் ஏற்றுக்கொண்டு, எங்களுக்கான உதவிகளை செய்ய தொடங்கினார். பின்னர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அரசு சார்பில் இப்போது மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். எனவே நாங்கள் ஒருங்கிணைந்து அரசிடம் கேட்டோம், அவர்களும் உதவியை செய்தார்கள், செய்தும் வருகிறார்கள்.
பயிற்சி எத்தனை காலம்? எங்கு நடந்தது?
எங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் எம்.ஆர்.எம்.ஆர்.எம். கல்ச்சுரல் பவுண்டேஷன் மற்றும் மரசிற்ப பணிகளில் இந்திய அளவில் பத்மஸ்ரீ விருது பெற்ற மர சிற்ப பயிற்சியாளர் ராஜூ பயிற்சி அளித்தார். எப்படி எந்திரத்தை கையாள்வது, இயற்கையான பொருட்களில் இருந்து நிறத்தை எப்படி எடுப்பது, அதை பக்குவப்படுத்துவது எப்படி என்று கற்றுக்கொடுத்தார்கள். மேலும் எங்கள் கிராமத்தில் ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கு முன்பு மர சிற்பங்கள் செய்வதற்கான கட்டிடத்தை அரசு கட்டிக்கொடுத்து இருந்தது. அங்கு வைத்து தான் பயிற்சியும் நடந்தது. மொத்தம் 60 நாட்கள் பயிற்சியாகும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடந்தது. வீட்டுவேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, பயிற்சியில் கலந்து கொண்டோம்.
பயிற்சி எளிதாக இருந்ததா?
முதலில் எந்திரத்தின் அருகே செல்லவே பயந்தோம். அதன் பின்னர் அதை கையாளக்கற்றுக்கொண்டோம். தற்போது எங்களது கற்பனையில் புதிது புதிதாக பொருட்களை உருவாக்கி வருவதால் ஆர்வமும் அதிகரித்துள்ளது. இரண்டு இடங்களில் கண்காட்சி அரங்கம் அமைத்தபோது, பலரும் ஆர்வமுடன் பார்த்து வாங்கி சென்றனர். இதனால் இதன் மீதான நாட்டம் இன்னும் அதிகரித்துள்ளது. மக்களின் தேவையை அறிந்து, பொருட்களை தயார் செய்து வருகிறோம்.
நீங்கள் தயார் செய்யும் பொருட்களுக்கு இயற்கையான முறையில் தயாரித்த வண்ணம் பூசுகிறீர்களே, இது எதற்காக?
தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனால் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையிலான பொருட்களை தயார் செய்து வருகிறோம். வெறும் மர சிற்ப பொருட்களை கொடுத்தால் மக்கள் அதை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதனால் தான் வண்ணம் பூசுகிறோம். அதோடு, குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தும் பொருட்களிலும் இயற்கையான பொருட்களில் தயாரான வண்ணம் பூசுகிறோம். இதை குழந்தைகள் கடித்தால் கூட எதுவும் ஆகாது. அந்த வகையில் பார்த்து, பார்த்து ஒவ்வொரு பொருட்களையும் தயார் செய்கிறோம்.
இயற்கை வண்ணமா? அது என்ன புதிதாக உள்ளதே?
ஆம்! பலா மரத்தின் பட்டையில் இருந்து ஆரஞ்சு நிறத்தை எடுப்போம். புங்கமர காயில் இருந்து பச்சை நிறம், தூங்கு மூஞ்சி மரத்தின் பூவில் இருந்து ஆரஞ்சு, அதன் காய்களில் இருந்து இன்டிகோ நிறம் என்று ஒவ்வொரு மரத்தில் இருந்தும் கிடைக்கும் பொருட்கள் மூலம் வண்ணங்களை எடுக்கிறோம்.
நகைகளை எவ்வாறு உருக்குவார்களோ அதேபோன்று அடுப்பு தயார் செய்து, பட்டை அல்லது காய்கள் போன்றவற்றை உலக்கையால் நசுக்கி, அந்த நீரை எடுத்து காய வைத்து நிறத்தை உருவாக்குவோம். காலையில் பணியை தொடங்கினால் மதியத்துக்குள் 3 நிறத்தை தயார் செய்ய முடியும். அவ்வாறு எடுக்கும் நிறத்தை 15 நாட்கள் வைத்து பயன்படுத்துவோம்.
மர சிற்பங்கள் தயார் செய்ய வேலையை எவ்வாறு பிரித்துக்கொள்கிறீர்கள்?
மர சிற்பங்கள் தயார் செய்வதற்கென்று 4 எந்திரங்கள் உள்ளது. நாங்கள் 24 பேர் பயிற்சி முடித்துள்ளோம். இதில் 8 பேர் வீதம் ஷிப்டு அடிப்படையில் வேலை செய்து வருகிறோம். மின்கட்டணம், மரக்கட்டைகள் போன்ற செலவுகளை கணக்கிட்டு வரும் லாபத்தை பகிர்ந்து கொள்வோம். சிற்பங்கள் செய்ய தேவையான மரக்கட்டைகளை நாங்களே பட்டறைக்கு சென்று வாங்கி வருகிறோம். ஆனால் மரங்கள் விலை சற்று உயர்வாக இருப்பது தான் கஷ்டமாக உள்ளது.
இந்த பொருட்கள் செய்வதற்கென்று நாங்கள் தேர்வு செய்யும் மரங்களாக, வெப்பாலை, மாவலிங்கம் மரம், வாகை, நாவல், வேம்பு போன்ற மரங்கள் உள்ளன.
உங்களால் யாருக்கேனும் பயிற்சி அளிக்க முடியுமா?
தற்போது எங்கள் கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் பயிற்சி பெறுவதற்கு ஆர்வமாக வந்துள்ளனர். அவர்களுக்கு நாங்கள் கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
உங்களது அடுத்த இலக்கு?
நாங்கள் தயார் செய்யும் பொருட்கள் முற்றிலும் இயற்கை சார்ந்தவை தான். எனவே குழந்தைகள் விளையாடுவதற்காக நாங்கள் தயார் செய்யும் பொருட்களை தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு அரசு வாங்கி கொடுத்தால், எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், கள்ளக்குறிச்சியில் எங்கள் சுய உதவிக்குழுவின் இந்த தொழிலை ஒரு நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பது எங்கள் இலக்காக இருக்கிறது.
குழந்தைகளுக்கான பொருட்கள் தயாரிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறீர்களா?
வீடுகளில் பிளாஸ்டிக் டப்பாக்கள், பிளாஸ்டிக் கிளாஸ்களைதான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் மரத்திலான கிளாஸ், மளிகைப் பொருட்களை போட்டுவைக்க தேவையான பொருட்களையும் தயார் செய்கிறோம். மேலும், நகைகள் போட்டுவைக்க பெட்டி, குங்கும சிமிழ் என்று வீட்டு உபயோகத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்கிறோம்.
உங்களை போன்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
பெண்கள் ஆண்களின் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை இதற்கு முன்னர் தான் இருந்தது. ஆனால் தற்போதைய காலம் அப்படியானதாக இல்லை. நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு வருமானம் வருகிறது. சொந்த காலில் பெண்களும் நிற்கலாம். எதிலும் லாபம் கிடைக்குமா? வரவேற்பு இருக்குமா? என்று எண்ணிக்கொண்டு இருக்கக்கூடாது. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம் என்று தைரியமாக முடிவு செய்தால் வெற்றி பெறலாம். மகளிர் குழுவை பொறுத்தவரை என்றும் வெற்றித்தான் உண்டு'' என்றார்.