ஷாருக்கானை உச்சத்தில் வைக்குமா 'டன்கி'


ஷாருக்கானை உச்சத்தில் வைக்குமா டன்கி
x

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர், ராஜ்குமார் ஹிரானி. இவர் இயக்கும் ஒரு படத்திற்கும், மற்றொரு படத்திற்கும் இடையில் மூன்று, நான்கு ஆண்டுகளாவது இடைவெளி இருக்கும். அப்படி பெரிய இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் படங்களைப் பார்க்கும் ரசிகனுக்கு, அந்தப் படத்தில் இருக்கும் சமூக கருத்தைச் சொல்லும் கதை, நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்த திரைக்கதை, துல்லியமாக வெட்டப்பட்ட படத்தொகுப்பு போன்றவற்றின் மூலம் ராஜ்குமார் ஹிரானியின் காலதாமத்திற்கான காரணம் புரியும். இயக்குனராக அறிமுகமாகிய 20 வருடங்களில், வெறும் 5 படங்களை மட்டுமே அவர் இயக்கியிருந்தாலும், அவை அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதும், அந்த 5 படங்களும் வசூல் செய்த தொகை நம்மை மலைக்கச் செய்வது என்பதும் ராஜ்குமார் ஹிரானியின் பெருமைச் சொல்வதாகும்.

ஒரு படத்தை சமூக அக்கறையோடும், ரசிகர்கள் விரும்பும் வகையில் நகைச்சுவையோடும் கொடுக்கும் ராஜ்குமார் ஹிரானி, சொல்ல வந்த கருத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும் கொடுப்பதில் கில்லாடி. அப்படி அவர் இயக்கத்தில் முதன் முதலாக வெளியான படம் தான் 'முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.'. 2003-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சஞ்சய்தத் நடித்திருந்தார். மருத்துவம் பார்க்க வரும் நோயாளிகளை, உடலாக மட்டுமின்றி உணர்வாகவும் ஒரு மருத்துவர் பார்க்க வேண்டும் என்பதை ஆழமாக வலியுறுத்திய படம் இது. இந்தப் படத்தைத்தான் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' என்று மொழி மாற்றம் செய்து எடுத்திருந்தனர். ரூ.12 கோடியில் எடுக்கப்பட்ட 'முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.' திரைப்படம் ரூ.57 கோடியை வசூலித்தது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதே நடிகர்களை வைத்து, மீண்டும் 'லகே ரகோ முன்னா பாய்' என்ற படத்தை இயக்கினார், ராஜ்குமார் ஹிரானி. இந்தப் படம், 2006-ம் ஆண்டு வெளியானது. ரூ.19 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப்படம் ரூ.127 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. தன்னுடைய அடுத்தப் படத்திற்கு வேறொரு வித்தியாசமான கதையை எழுதினார், ராஜ்குமார் ஹிரானி. இந்தப் படத்தில் அமீர்கானை நடிக்க வைத்தார். 2009-ம் ஆண்டு வெளிவந்த '3 இடியட்ஸ்' என்ற அந்தப் படம் சக்கை போடு போட்டது.

எந்த ஒரு படிப்பாக இருந்தாலும், அதில் கொடுக்கப்பட்ட பாடத்தை மனப்பாடம் செய்யாமல், புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்று மாணவனுக்கும், தங்கள் விருப்பத்திற்காக பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட படிப்பில் தள்ளக்கூடாது; அவர்களுக்குப் பிடித்த பாடம் எது என்பதை தெரிந்து கொண்டு அதில் அவர்கள் சாதனைப் படைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோருக்கும், புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகளை மட்டுமே வாசித்துக் காட்டி விட்டு, மாணவர்களை படிபடி என்று தொல்லை கொடுக்காமல், அவர்களின் திறமைக்கு ஏற்ப பாடத்தை சொல்லிக் கொடுக்க முன்வரவேண்டும் என்று ஆசிரியர்களுக்கும் சொன்ன திரைப்படம் அது. ரூ.55 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரூ.400 கோடியை வசூலித்தது. இந்தப் படத்தை தமிழில் விஜய் நடிப்பில் 'நண்பன்' என்ற பெயரில், பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்து குறிப்பிடத்தக்கது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நான்காவதாக வந்தப் படம் 'பி.கே.' இந்தப் படத்திலும் அமீன்கான் தான் கதாநாயகான நடித்திருந்தார். இந்திய நாட்டில் இருக்கும் மதங்களை வைத்து, அதை வழிநடத்துபவர்கள் செய்யும் பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டிய படம் இது. அதை சீரியசாக இல்லாமல், வழிநெடுகிலும் நகைச்சுவையை இழையோட வைத்து, சொல்ல வந்த கருத்தையும் பொட்டில் அடித்தாற் போல சொல்லிய விதத்தில்தான், 'பி.கே.' படம், அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து விட்டது. பாலிவுட் சினிமாவில் முதன் முறையாக ரூ.800 கோடியை வசூல் செய்த படமாக இந்தப் படம் அமைந்தது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் ரூ.122 கோடிதான். இந்தப் படம் 2014-ம் ஆண்டு வெளிவந்தது.

அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளிவந்த படம், 'சஞ்சு'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் பற்றிய பயோகிராபிக் படம். மிகப்பெரிய ஒரு நடிகருக்கு மகனாகப் பிறந்து, நடிகராக உச்சம் பெற்று, போதைப் பழக்கத்தால் தடம்மாறிச் சென்று, ஒரு கட்டத்தில் சிறை வாழ்க்கையையும் அனுபவித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பற்றி இந்தப் படம் சொன்னது. இந்தப் படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்தில், பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகரான ரன்பீர் கபூர் நடித்திருந்தார். சஞ்சய் தத் உடல்மொழியை இம்மியும் பிசகாமல் அப்படியே திரையில் கொண்டு வந்திருந்தார், ரன்பீர் கபூர். அவரது நடிப்பு இந்தப் படத்தில் வெகுவாக பாராட்டப்பட்டது. ரூ.96 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படமும், சுமார் ரூ.600 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம்தான்.

'சஞ்சு' திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், ராஜ்குமார் ஹிரானியின் அடுத்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு, தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி முடித்து விட்டதாக அவர் சொல்லியிருந்தார். அப்போதில் இருந்தே, அந்தப் படத்தில் ஷாருக்கான்தான் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி உலவி வந்தது. அதை நிரூபிக்கும் வகையில், 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், ராஜ்குமார் ஹிரானி 'டன்கி' என்ற படத்தை இயக்கப் போவதாகவும், அதில் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

'டன்கி' திரைப்படமும், சமூகம் சார்ந்த ஒரு பிரச்சினையை நகைச்சுவையாகவும், சென்டிமெண்டாகவும் சொல்லும் திரைப்படமாகத்தான் எடுக்கப்பட்டு இருக்கிறதாம். இந்தப் படத்தில் ராஜ்குமார் ஹிரானி கையில் எடுத்திருப்பது, சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கும் இளைஞர்கள், அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி பணம் பறிக்கும் கும்பல், அவர்களால் அலைக்கழிக்கப்படும் இளைஞர்களின் வாழ்க்கையைப் பற்றியதாக இருக்கும் என்கிறார்கள். ரூ.100 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், வருகிற டிசம்பர் மாதம் 22-ந் தேதி வெளியாக இருக்கிறது.

ராஜ்குமார் ஹிரானியுடன் முதன் முறையாக இணைந்துள்ள ஷாருக்கானுக்கு, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். ஏனெனில் ராஜ்குமார் ஹிரானி தன்னுடைய திரைப்படங்களில் இதுவரை செய்திருக்கும் சம்பவங்கள் அப்படிப்பட்டது. ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு (2023) தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதத்தில் 'பதான்' திரைப்படம் வெளியாகி, ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 7-ந் தேதி 'ஜவான்' திரைப்படம் வெளியானது. இந்தப் படமும் ரூ.1000 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஒரே ஆண்டில் ஷாருக்கானின் மூன்றாவது திரைப்படமாக 'டன்கி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தினால், பாலிவுட்டில் மட்டுமின்றி, இந்திய அளவில் ஷாருக்கான் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் என்கிறார்கள், சினிமாத் துறையினர்.

ராஜ்குமார் ஹிரானியையும், ஷாருக்கானையும், 'டன்கி' திரைப்படம் இன்னும் பெரும் உச்சத்தில் வைக்கப் போகிறதா? அல்லது எல்லாத் திரைப்படங்களையும் போல பத்தோடு பதினென்றாக கடந்து போய்விடப் போகிறதா? என்பதை அறிந்து கொள்ள இன்னும் மூன்று மாதங்கள் முழுமையாக இருக்கிறது.

இயக்குனரின் எதிர்நீச்சல்

1962-ம் ஆண்டு பிறந்த ராஜ்குமார் ஹிரானியின், ஆரம்ப கால சினிமா வாழ்க்கை இனிமையாக அமையவில்லை. படிப்பு முடிந்து சினிமாவில் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் வந்தவருக்கு, பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. தன்னுடைய 25 வயதில் ஒரு குறும்படத்தில் படத்தொகுப்பு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பட வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்த அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் வாழ்க்கையை நகர்த்த வேறு வழியைத் தேடினார். அப்போது தொலைக்காட்சியில் வரும் விளம்பரப் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தன்னுடைய திறமையைக் காட்டியவர், அதில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டார். பல வருடங்கள் அந்தப் பணியில் இருந்தவருக்கு, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மாறவில்லை.

1994-ம் ஆண்டு '1942: ஏ லவ் ஸ்டோரி' என்ற படத்திற்கான விளம்பர வேலையும், அந்தப் படத்தின் டிரெய்லரை உருவாக்கும் பணியும் கிடைத்தது. 1998-ம் ஆண்டு 'கரீப்' என்ற படத்தின் விளம்பரப் பணியையும் செய்தார். 2000-ம் ஆண்டில் 'மிஷன் காஷ்மீர்' என்ற படத்தில் படத்தொகுப்பு வாய்ப்பு கிடைத்து. மேற்கண்ட மூன்று படங்களும் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் வெளியானவை. அவரது பழக்கத்தின் பேரில், தன்னிடம் இருந்த ஒரு கதையை இயக்கும் வாய்ப்பு ராஜ்குமார் ஹிரானிக்கு கிடைத்தது. அந்தப் படத்தை விது வினோத் சோப்ரா தயாரித்தார். அந்தப் படம்தான் 'முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.'. இந்தப் படத்தின் வெற்றியால், தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார் ராஜ்குமார் ஹிரானி.


Next Story