படித்ததோ பார்மசி... பிடித்ததோ பஸ் ஸ்டியரிங்...
இது பெண்களுக்கான காலம். ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருகிறார்கள். சாலைகளிலும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை ஆண்களுக்கு ஈடுகொடுத்து சர்வ சாதாரணமாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி வாகனங்களை இயக்கும் பெண்களுக்கு மத்தியில், சமீபத்தில் டிரெண்டிங் ஆகி இருக்கிறார், கோவையை சேர்ந்த இளம் பெண் ஷர்மிளா. 24 வயதாகும் இவர் டவுன் பஸ்சை இயக்கி கோவை மண்ணின் முதல் பெண் ஓட்டுனராக கலக்கிக்கொண்டிருக்கிறார்.
அதுவும் கோவையின் இதயப்பகுதியாக கருதப்படும் காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்தில் இருந்து தான் இவர் இயக்கும் பஸ் புறப்படுகிறது. பயமின்றியும், சாதூரியமாகவும் ஓட்டிச்செல்லும் ஸ்டைலுக்காக கோவை மக்களிைடயே மட்டுமல்ல தமிழகம் தாண்டியும் பரீட்சயமாகி விட்டார். ஷர்மிளாவின் பூர்வீகம் கோவையை அடுத்த வடவள்ளி திருவள்ளுவர் நகர். தந்தை மகேஷ், சரக்கு வாகன டிரைவர். தாய் ஹேமா. இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். ஷர்மிளா மருத்துவ துறை தொடர்பான டி.பார்ம் படித்தவர். ஆனால் வாகனம் ஓட்டுவதன் மீது கொண்ட மோகம் காரணமாக, பஸ் டிரைவராகிவிட்டார்.
போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் இருசக்கர வாகனம் இயக்குவதையே அச்சமாக கருதும் சில பெண்களுக்கு மத்தியில் பஸ் ஓட்டுவதை லட்சியமாக கொண்டு, இன்று கோவையின் முதல் பஸ் ஓட்டுனர் என்ற பெருமையையும் பெற்றுவிட்டார். காக்கிச்சட்டை, பேண்டு அணிந்துகொண்டு காந்திபுரம், சோமனூர் வழித்தடத்தில் தனியார் பஸ்சை (20 ஏ) லாவகமாக இயக்கி வருகிறார்.
ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு கியர் மாற்றி எந்தவித பதற்றமும் இன்றி அவர் பஸ்சை இயக்குவதை பயணிகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். அவருக்கு கைக்குலுக்கி வாழ்த்தும் சொல்கிறார்கள். சிலர் அவருடன் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். பஸ்சை இயக்குவதற்கு தயாராக இருந்த ஷர்மிளாவிடம் நாம் நடத்திய நேர்காணல்...
ஓட்டுனராக வேண்டும் என்ற ஆர்வம் வந்தது எப்படி?
எனது தந்தை சிலிண்டர்களை எடுத்து செல்லும் சரக்கு வாகனத்தை சொந்தமாக வைத்து இருந்தார். டிரைவராக இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதை கிடைப்பது இல்லை. டிரைவர் என்றாலே சமூகத்தில் பலரும் முகம் சுழிப்புடன் தான் பார்க்கும் நிலை இருந்தது. அது எனக்கு வேதனை அளித்தது. எப்படியாவது டிரைவராகி அனைவரும் திரும்பிபார்க்கும் வகையில் எனது தந்தைக்கும், அனைத்து டிரைவர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. 7-ம் வகுப்பு படிக்கும்போது டிரைவிங் மீதான ஆர்வம் இன்னும் அதிகமானது.
தந்தை கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் சரக்கு வாகனத்தை அவரது வழிகாட்டுதலின்படி ஓட்டிப்பார்த்தேன். ரிவர்ஸ் எடுப்பது எப்படி? என்பதையும் அவரிடம் கற்றுக்கொண்டு நன்றாக ஓட்டி பழகினேன்.
2019-ம் ஆண்டு தந்தைக்கு உதவியாக வருவாய் ஈட்டவேண்டும் என்று எண்ணி ஆம்னி வேன் வாங்கினேன். அதில் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து சென்று வந்தேன். அதன் மூலம் மாதம் ரூ.28 ஆயிரம் வரை வருவாய் கிடைத்தது. கொரோனா காலத்தில் பள்ளி மூடப்பட்டதால் கொஞ்சம் நஷ்டமாகி விட்டது. ஆனாலும் மனம் தளராமல் ஆட்டோ டிரைவராக மாறி கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு ஏற்றிச்சென்று உதவி செய்து வந்தேன். அதன் தொடர்ச்சியாகதான் டவுன் பஸ் ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்றேன். தற்போது பஸ் ஓட்டுனராக சேர்ந்து பணியாற்றி வருகிறேன்.
ஓட்டுனர் உரிமம் பெற்றது எப்படி?
முதலில் மோட்டார் சைக்கிள் மற்றும் 'லைட்' எனப்படும் இலகுரக வாகனங்கள் (வெள்ளை போர்டு) இயக்கும் ஓட்டுனர் உரிமம் பெற்றேன். அதன்பிறகு 'பேட்ஜ்' எனப்படும் ஓட்டுனர் உரிமம் பெற்றேன். அதைத்தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 'ஹெவி' எனப்படும் கனரக வாகனங்களை இயக்கும் ஓட்டுனர் உரிமம் பெற்றேன். இதற்காக கனரக வாகனங்களை இயக்கி கடுமையாக பயிற்சி பெற்றேன். அதனால்தான் என்னால் பயமின்றி கனரக வாகனம் ஓட்டி 'ஹெவி' ஓட்டுனர் உரிமம் பெற முடிந்தது.
டி.பார்ம் படித்துவிட்டு பஸ் இயக்க வந்தது ஏன்?
ஒரு பெண்ணுக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து படித்தேன். பள்ளிப்படிப்பை முடித்ததும் டி.பார்ம் படிப்பை தேர்ந்தெடுத்தேன். ஆனால் எனது சிறு வயது கனவு பஸ் இயக்குவது தான். அதனால்தான் டி.பார்ம் படித்தாலும் கூட வாகனம் இயக்கும் ஆர்வம் குறையவில்லை. நான் ஏற்கனவே ஆம்னி வேன், ஆட்டோ சொந்தமாக வாங்கி ஓட்டினேன். என்னிடம் பஸ் இல்லாததாலும், பஸ் ஓட்டுவது எனது வாழ்நாள் கனவாக இருந்ததாலும் அதனை நிறைவேற்றவே பஸ் இயக்க வந்தேன்.
எனது முயற்சிக்கு பெற்றோர், சகோதரர்கள் உறுதுணையாக இருந்தனர்.
தந்தை தான் எனக்கு பஸ் ஓட்டுவதற்கு பயிற்சி கொடுத்தார். 6 மாதத்துக்கு முன்பு ஹெவி ஓட்டுனர் உரிமம் பெற்றேன். முதலில் 31 சி என்ற வழித்தடம் கொண்ட டவுன் பஸ்சில் சேர முயற்சித்தேன். அதற்குள் 20 ஏ என்ற வழித்தட டவுன் பஸ் உரிமையாளர் துரைக்கண்ணன் என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு பஸ் இயக்க வாய்ப்பு கொடுத்தார். அவர் முன்னிலையில் பஸ்சை இயக்கி காண்பித்தேன். எனது டிரைவிங் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. இதனால் அடுத்த நாளே என்னை பணியில் சேர சொல்லிவிட்டார்.
பஸ் இயக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?
என் மீது நம்பிக்கை வைத்து 12 மீட்டர் நீளமுள்ள பஸ்சை கொடுத்துள்ளார்கள். தற்போது ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி காரணமாக பஸ்சில் நவீன தொழில்நுட்பங்கள் அதிகம். இதனால் பஸ் இயக்குவது எளிதாக உள்ளது. ஆனாலும் கவனமாக இயக்கி வருகிறேன். பவர் ஸ்டியரிங் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு திருப்ப வேண்டிய அவசியம் இல்லை. பஸ் நிலையத்தில் பஸ்சை ரிவர்ஸ் எடுப்பதற்கு சக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
பிற பஸ் டிரைவர்கள் எப்படி பார்க்கிறார்கள்?
அனைத்து டிரைவர்களும் எனக்கு ஆதரவாக உள்ளார்கள். நான் பஸ்சை இயக்கிக்கொண்டு வந்தால் உடனே வழி கொடுத்து விடுகிறார்கள். என்னுடன் போட்டி போட்டுக்கொண்டு 'ரேஸ் டிரைவிங்' எதுவும் செய்வது இல்லை. பயணிகளும் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். வெயில் காலம் என்பதால் தண்ணீர் நிறைய குடிக்க அறிவுரை கூறுவதுடன் சிலர் குளிர்பானம், தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுத்து ஆதரவளிக்கிறார்கள். ஒரு பெண்ணாக நான் அந்த பஸ்சை இயக்குவதால் பஸ்சில் பல்வேறு இடங்களில் பெண்கள் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை பஸ் உரிமையாளர் எழுதி வைத்துள்ளார். இவை என்னை போன்ற பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
உங்களிடம் பிடித்தது என்ன?
எல்லோரிடமும் சகஜமாக பழகுவேன். இது எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் பஸ் இயக்குகிறீர்கள்?
நான் காலை 5.30 மணிக்கு பணிக்கு வந்து பஸ்சை இயக்க ஆரம்பிப்பேன். இரவு 11.15 மணிக்கு டூட்டியை முடிப்பேன். நாள் ஒன்றுக்கு காந்திபுரத்தில் இருந்து சோமனூருக்கு 12 முறை சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி வருகிறேன். 384 கிலோமீட்டர் வரை இயக்குகிறேன். பின்னர் மறுநாள் ஓய்வு கிடைக்கும்.
அரசு பஸ் இயக்க வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா?
அரசாங்கமாக பார்த்து அரசு பஸ்சை இயக்கும் பணி கொடுத்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வேன்.
திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?
பஸ் ஓட்டுவது என்பது தான் எனது கனவாக இருந்தது. அதை நிறைவேற்றும் வரை திருமணம் குறித்து சிந்திக்கவில்லை. தற்போது அந்த கனவு நிறைவேறி உள்ளதால் 27 வயது ஆனதும் திருமணம் செய்துகொள்வேன்.
ஓட்டுனராக விரும்பும் பெண்களுக்கு நீங்கள் கூறுவது என்ன?
நிறைய தடைகள் வரும். அதையெல்லாம் தாண்டி தான் வெற்றி பெற முடியும். சாதனைக்கு வயதும் இல்லை, ஆண், பெண் என்ற பாலினமும் தேவையில்லை. சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், துடிப்பும் இருந்தால் போதும். வானையே வில்லாக வளைக்கும் திறன் பெண்களுக்கு உண்டு. நிறையபேர், 'நீ இருக்கிற உயரத்துக்கு ரோடு தெரியுமா, வீடு தெரியுமா' என்று கேட்பார்கள். அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். நானும் இதையெல்லாம் தாண்டிதான் வந்து உள்ளேன். கோவையில் முதல் பெண் டிரைவர் என்ற கனவை நிறைவேற்றி உள்ளேன். இதுபோன்று பிற பெண்களும் சாதனை படைக்க வேண்டும்.