இட்லி பற்றிய இனிமையான தகவல்கள்


இட்லி பற்றிய இனிமையான தகவல்கள்
x
தினத்தந்தி 13 April 2023 9:00 PM IST (Updated: 13 April 2023 9:00 PM IST)
t-max-icont-min-icon

தென் இந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்கமுடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

எளிதில் செரிமானம் ஆவதோடு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருப்பதால் தென்னிந்தியாவை கடந்து உலகம் முழுவதும் இட்லி பிரபலமாகிவிட்டது. உலக இட்லி தினம் கொண்டாடும் அளவுக்கு அதன் புகழ் உயர்ந்துவிட்டது. சமீபத்தில் உலக இட்லி தினம் (மார்ச் 30) கொண்டாடப்பட்ட நிலையில், இட்லி பற்றிய இனிமையாக தகவல்கள் பற்றி பார்ப்போம்.

உடல் எடையை குறைக்கும்: இட்லியில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. எனவே இது எடை இழப்புக்கு வித்திடும். மேலும் இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். அதனால் பசி உணர்வு கட்டுக்குள் இருக்கும்.

செரிமானத்தை எளிதாக்கும்: இட்லியில் நார்ச்சத்து மட்டுமின்றி இரும்பு சத்தும் நிறைந்துள்ளது. உளுந்தம் பருப்பு உடலுக்கு தேவையான இரும்பு சத்தை தக்க வைக்க உதவும். இவை செரிமானத்தை எளிதாக்கவும் வழிவகை செய்யும்.

புரதச்சத்து கிடைக்கும்: இரண்டு வகையான புரதங்கள் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. முதல் வகை புரதம் விலங்கு இறைச்சிகளில் இருந்து கிடைக்கின்றன. அவை உடலுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களையும் வழங்குகின்றன. இரண்டாம் வகை புரதம் காய்கறிகள், பழங்கள் போன்ற தாவர வகைகளில் இருந்து பெறப்படுகின்றன. அவற்றுள் சில அமினோ அமிலங்கள் இல்லாதிருக்கும். தானியங்கள் மற்றும் பருப்புகளில் சில அமினோ அமிலங்கள் இல்லாததால் அவை இரண்டாம் வகை புரதமாக கருதப்படுகின்றன. ஆனால் இட்லியில் இந்த இரு கலவைகளும் சேர்க்கப்படும்போது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் கிடைக்கும்.

குடல் ஆரோக்கியத்தை காக்கும்: இட்லி மாவு புளிக்கவைக்கப்படும்போது நடக்கும் நொதித்தல் செயல்முறை காரணமாக புரோ பயாடிக்குகள் உருவாகின்றன. இவை குடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. செரிமானத்தை மேம்படுத்துவது முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது.

இட்லியை வண்ணமயமான உணவாகவும், நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கு நிறைய காய்கறிகளுடன் சேர்த்து தயாரித்து சாப்பிடலாம். சட்னிக்கு பதிலாக காய்கறிகள் அதிகம் கலந்த சாம்பார் தயாரித்து சாப்பிடுவது சிறப்பானது.


Next Story