ஐ.ஏ.எஸ். பணியை துறக்கவைத்த ஆசிரியர் சேவை
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பலருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது கனவாக இருக்கும். கடினமான தேர்வுகளில் ஒன்றாக சிவில் சர்வீசஸ் தேர்வு விளங்குவதால் அதில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்குவதற்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
முதல் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் பலரும் மனம் தளராமல் படித்து மீண்டும் மீண்டும் தேர்வெழுதி வெற்றிவாகை சூடிவிடுவார்கள். இதில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் தாங்கள் கற்ற விஷயங்களை பிற மாணவர்களுக்கு பயிற்றுவித்து தங்களின் நிறைவேறாத ஐ.ஏ.எஸ். கனவை அவர்கள் மூலம் நிறைவேற்றிய திருப்தியை அடைவார்கள். தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். இதில் இருந்து மாறுபட்டவர் விகாஸ் திவ்யா கீர்த்தி.
பிரபலமான ஐ.ஏ.எஸ் பயிற்சியாளர்களில் ஒருவராக அறியப்படும் இவர், சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனவர். ஆனால் அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு பல மாணவர்களின் ஐ.ஏ.எஸ். கனவை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். ஆண்டுதோறும் இவரிடம் படிக்கும் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
அரியானா மாநிலத்தை சேர்ந்த இவருடைய பெற்றோர் இந்தி பேராசிரியர்கள். அதனால் இவருக்கும் சிறுவயது முதலே இந்தி மொழி மீது ஈர்ப்பு அதிகமானது. பள்ளிப்படிப்பை முடித்ததும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இந்தி இலக்கியத்தை தேர்ந்தெடுத்தார். எம்.ஏ., எம்.பில். பி.எச்டி., என இந்தியிலேயே படிப்பை முடித்தார்.
பெற்றோரை பின்பற்றி டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியை தொடங்கினார். அப்போது மாணவர்கள் மத்தியில் சிவில் சர்வீசஸ் தேர்வு மீதான மோகம் இருப்பதை அறிந்தவர், தாய் மொழியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
விகாஸ் திவ்யா கீர்த்திக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வு மீது நாட்டம் எழ, அதற்கு படிக்க தொடங்கினார். முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகிவிட்டார். 1996-ம் ஆண்டு உள்துறை அமைச்சகத்தில் பணியமர்த்தப்பட்டார். அங்கு ஒரு வருட காலம் பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு பெற்றோரை போலவே ஆசிரியர் பணியை தொடர்வதில்தான் விருப்பம் நீடித்தது.
அதனால் ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து விலகியவர், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்தார். 1999-ம் ஆண்டு டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பை தொடங்கினார். இன்று இவரது பயிற்சி நிறுவனம் நாட்டின் பிரபலமான ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.
யூடியூப் சேனல் மூலமும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைமுறைகளை விவரித்துக்கொண்டிருக்கிறார். அதனால் இவரது யூடியூப் சேனலை 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கிறார்கள்.