தமிழ் படிக்கும் ஜெர்மனியர்கள் 30 ஆண்டுகளாக தொடரும் பந்தம்
தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ் மீதும், தமிழர் கலாசாரம் மீதும் தீராத பற்று கொள்கிறார்கள்.
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இங்கு பின்பற்றப்படும் கலை, கலாசாரம், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், விருந்தோம்பல் போன்ற அம்சங்களை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். அவற்றை பின்பற்றவும் தொடங்கி விடுகிறார்கள். குறிப்பாக தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ் மீதும், தமிழர் கலாசாரம் மீதும் தீராத பற்று கொள்கிறார்கள். தமிழ் மொழியை கற்றுத்தேர்ந்து தமிழர்களாக தங்களை நிலைநிறுத்திக்கொண்டு தமிழ் சேவையாற்றுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் உல்ரிக் நிக்லஸ்.
ஜெர்மனி இவரது பூர்வீகம். அங்குள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றிய இவர் தமிழ் படிக்கும் ஆர்வத்தில் தமிழகம் வந்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தார். அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்த மதுரையை சேர்ந்த புகைப்பட கலைஞர் சரவணனின் அறிமுகம் உல்ரிக் நிக்லஸுக்கு கிடைத்தது. அவர் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இதுவே அவர்களது காதலுக்கும் வித்திட்டது.
இதற்கிடையே உல்ரிக் நிக்லஸ் தமிழில் முனைவர் பட்டம் பெற்றார். அவருக்கு புதுச்சேரியில் உள்ள இ.எப்.இ.ஓ பிரெஞ்சு இன்ஸ்ட்டிடியூட்டில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. இதையடுத்து புதுச்சேரியில் குடியேறினார். அவரை தொடர்ந்து நாளடைவில் மதுரையில் இருந்து சரவணனும் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்தார். இருவரும் கணவன்-மனைவியாக புதுச்சேரியில் உள்ள கோர்க்காடு எனும் ஊரில் வசித்து வந்தனர்.
இதற்கிடையே பழம்பெரும் மொழியான தமிழ் மீதான காதலால் தன்னைப் போல் தன் நாட்டவரும் தமிழ் கற்க வேண்டும் என்று உல்ரிக் நிக்லஸ் விரும்பினார். அதை நடைமுறையில் சாதித்தும் காட்டிவிட்டார்.
ஆம்..! ஜெர்மன் நாட்டில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து வகுப்பு நடத்தி தமிழின் பழம் பெருமையையும், தமிழ் கலாசாரம், பண்பாட்டையும் கற்றுக்கொடுத்தார். இவ்வாறு ஆண்டுதோறும் ஜெர்மன் நாட்டவர்களை புதுச்சேரிக்கு வரவழைத்து தமிழ் வளர்க்கும் பணியில் தன்னை அர்ப்பணித்தார், உல்ரிக் நிக்லஸ். அங்கிருந்து ஏராளமானோர் இங்கு வந்து ஆர்வமாக தமிழ் கற்றுக்கொண்டிருந்தனர்.
முதுமை காரணமாக சரவணன் இறந்துவிட்ட நிலையில், உல்ரிக் நிக்லஸும் பணி ஓய்வு பெற்றார். அதன்பிறகும் தமிழ் வகுப்பு பணிகளை தொடர்ந்த நிலையில் தற்போது கம்போடியாவில் ஓய்வு காலத்தை கழித்து வருகிறார்.
தனக்கு பிறகும் ஜெர்மனியர்கள் தமிழ் கற்பதை தொடர வேண்டும் என்று விரும்பியவர் தனது வளர்ப்பு மகள் வளர்மதி-தேசிகன் தம்பதியை இந்த வகுப்பை தொடர்ந்து நடத்துமாறு பணித்தார். அதை ஏற்று அந்த தம்பதியர் புதுச்சேரி கோர்க்காடு கிராமத்தில் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறார்கள். அங்கு ஜெர்மனியர்கள் தமிழ் கற்கும் பாங்கினை பார்வையிட சென்றோம்.
தமிழ் விருந்தாளிகளான அவர்களை சந்தித்தபோது கொஞ்சும் தமிழில் 'வணக்கம்' என்று கைகூப்பி நம்மை வரவேற்றனர். வளர்மதி-தேசிகன் தம்பதியின் மாடி வீட்டில் இந்த தமிழ் வகுப்பு நடக்கிறது. அங்கு ஜெர்மனியர்கள் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 90 நாட்கள் வீதம் ஆண்டுக்கு இருமுறை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இங்கு வரும் ஜெர்மனியர்களுக்கு எழுத்து தமிழ், பேச்சு தமிழ் என்ற இருவித பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ் எழுத்துக்களை எழுதவும், பேசவும் கற்றுத்தரப்படுகிறது.
தற்போது ஜெர்மன் கொலான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் சுவென் வார்ட்மென் மற்றும் மாணவர்களான கிளாரா, சியாரா, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழர்களான இந்துமதி, இவரது மகன் தில்சன் ஆகிய 5 பேர் இங்கு வந்து கடந்த ஒரு மாதமாக ஆர்வத்துடன் தமிழ் கற்று வருகிறார்கள்.
ஜெர்மனியர்களுக்கு தமிழ் வகுப்பு நடத்தி வரும் வளர்மதி-தேசிகன் தம்பதியரிடம் பேசினோம்.''உல்ரிக் நிக்லஸ் வகுத்து கொடுத்தபடி ஜெர்மனியர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் பணியை தொடர்கிறோம். தற்போது கம்போடியா நாட்டில் அவர் ஓய்வு எடுத்தாலும் தமிழ் ஆய்வு புத்தகம் எழுதும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளார். அந்த பணிகளை விரைவில் நிறைவு செய்வார். அவரது காலத்தில் இருந்து தற்போது வரை 30 ஆண்டுகளாக ஜெர்மனியர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் பணி தொடருகிறது. நூற்றுக்கணக்கான ஜெர்மனியர்கள் நேரடி தமிழ் பயிற்சி வகுப்பில் பங்கு பெற்றுள்ளனர். பேசுவதற்கும், எழுதுவதற்கும் தமிழ் கற்பிக்கப்படுவது போல் தமிழர் கலைகள், கலாசாரம், பண்பாடும் கற்றுத்தரப்படுகிறது. நேரடியாக சுற்றுலா அழைத்து சென்றும் தமிழர்களின் வரலாற்று தொடர்பை காட்சிபடுத்துகிறோம்.
பயிற்சிக்கு வந்த மாணவர்களாக நடத்தாமல் நமது விருந்தாளிகளாகவே மதிப்பளிப்பதால் இங்கு வரும் அயல் நாட்டினர் மெய்சிலிர்த்து போகிறார்கள். இந்த தமிழ் பணி எங்களுக்கு பிறகும் வாழையடி வாழையாக தொடரும்'' என்கிறார்கள்.
70 வயதாகும் உல்ரிக் நிக்லஸை, தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக்காக தொண்டாற்றும் குறிக்கோளை கொண்ட 'தமிழம்மா' என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார்கள். அதற்கேற்ப உல்ரிக் நிக்லஸின் தமிழ் பணியை பாராட்டி 2017-ம் ஆண்டுக்கான கலைஞர் விருது வழங்கப்பட்டது. இதுதவிர தொல்காப்பியர் விருது, ஜி.யு போப் விருது ஆகியவற்றையும் உல்ரிக் நிக்லஸ் பெற்றுள்ளார். தற்போதுகூட தமிழ் ஆராய்ச்சி கட்டுரைகள், நூல் எழுதும் பணியை தொடர்ந்து வருகிறார்.
புதுச்சேரி கோர்க்காட்டில் தமிழ் பயிலும் ஜெர்மன் மாணவர்கள் தமிழின் தொன்மையை அறிந்து வியப்பதாக கூறுகிறார்கள். ''தமிழ் எழுத்துக்கள் மிக அழகாக இருக்கிறது. அதுபோலவே தமிழ் மக்களும் அழகு. இங்கு எங்களுக்கு பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் போன்ற சங்க இலக்கியங்கள் கற்பிக்கப்பட்டது. கிராம வாழ்க்கை மிகவும் பிடித்து விட்டதால் ஆன்மிகமும், அமைதியும் கொண்ட கோர்க்காடு கிராமத்தில் தங்கி இருந்து படிக்க முடிவு செய்தோம்.
தமிழர்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, கலைகள் குறித்தும் தெரிந்து கொண்டோம். தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று சோழ மன்னர்களின் வரலாற்றை அறிந்தோம். தஞ்சையில் சித்த மருத்துவ குறிப்புகள், ஓலைச்சுவடிகள் பராமரிக்கப்படுவதை நேரில் பார்த்து வியந்தோம். தமிழ் கலைகளான ஒயிலாட்டம், சிலம்பம், பறை இசை போன்றவற்றையும் கற்றுக் கொண்டோம். இதெல்லாம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. எங்கள் நாட்டுக்கு சென்று தமிழ் மொழி, கலை, கலாசாரத்தை கொண்டாடுவதில் ஆர்வமாக இருக்கிறோம்'' என்றனர்.
தமிழர்களின் விருந்தோம்பல் முறையும் ஜெர்மன் மாணவர்களை சிலாகிக்க செய்திருக்கிறது. ''இங்கு பரிமாறப்படும் உணவும் தமிழ் உணர்வை தூண்டுவதாக இருக்கிறது. வாழை இலையில் கையால் சாப்பிடும் சுவை இதுவரை நாங்கள் அறிந்திராதது. அதிலும் இட்லி, தோசை விரும்பி சாப்பிட்டோம். புத்தம் புது காய்கறிகளால் சமைக்கப்படுவது சிறப்பு. அசைவத்தில் நண்டு, மீன் கடல் உணவுகள் நன்றாக இருந்தது'' என சாப்பாட்டு வகைகளை ரசித்து ருசிக்கிறார்கள்.
70 வயதாகும் உல்ரிக் நிக்லஸை, தன் வாழ்நாள் முழுவதையும் தமிழக்காக தொண்டாற்றும் குறிக்கோளை கொண்ட 'தமிழம்மா' என்று நெகிழ்ச்சியோடு சொல்கிறார்கள். அதற்கேற்ப உல்ரிக் நிக்லஸின் தமிழ் பணியை பாராட்டி 2017-ம் ஆண்டுக்கான கலைஞர் விருது வழங்கப்பட்டது.
எளிய முறையில் தமிழ் படிக்க உதவும் 'தினத்தந்தி'
ஜெர்மன் கொலோன் பல்கலைக்கழக பேராசிரியரான சுவென் வார்ட்மென் 'தினத்தந்தி' குறித்து சிலாகித்துப் பேசினார். ''தினத்தந்தியில் வெளியாகும் செய்திகள் பேச்சு தமிழ், எழுத்து தமிழ் என்கிற வகையில் அமைந்திருக்கின்றன. தலைப்பு, அதன் தொடர்ச்சியாக வரும் சம்மரி (லீடு), துணைத் தலைப்பு, தகவல், படம், அதன் அடியில் அதற்கான விளக்கம் என பிரித்து தருவதால் வாசிப்பதற்கு எளிதாக உள்ளது. இதுபோன்ற சிறப்பு வேறு பத்திரிகையில் இல்லை. எங்கள் நாட்டுக்கு 'தினத்தந்தி' நாளிதழை கட்டுக்கட்டாக வாங்கிச் சென்று மாணவர்களை படிக்க வைக்கிறேன். தற்போது 'இ' பேப்பர் ஆக வருவதால் அதுவும் உதவியாக உள்ளது. 'தினத்தந்தி' யின் இலவச இணைப்புகளில் வரும் படக்கதை மூலம் தமிழ் படிப்பது மிக எளிதாக உள்ளது. தலைப்புகள் பெரிய எழுத்துக்களால் இருப்பதும் தமிழ் கற்க வசதியாக இருக்கிறது'' என்று அழகு தமிழில் விவரித்தார்.