திருமணத்துக்கு முன்பே... 'போட்டோ சூட்டில்' டூயட் பாடும் ஜோடிகள்..!
திருமணம் முடிவானால் போதும், திருமணம் செய்து கொள்ளப்போகும் புதுமண ஜோடிகள் கனவு உலகத்தில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவும் நிச்சயதார்த்தம் முடிவான நொடியில் இருந்தே தங்களை ஹீரோ-ஹீரோயினாக நினைத்து கனவு உலகத்துக்குள் சஞ்சரிக்கிறார்கள்.
தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும்?, தங்கள் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் பெரும்பாலும் பெற்றோரைத் தாண்டி மணமக்களே பேசி முடிவு செய்கிறார்கள். அதில் லேட்டஸ்ட் டிரெண்ட் 'ப்ரீ மேரேஜ் வெட்டிங் சூட்' (Pre marriage wedding shoot).
ஒவ்வொருவருக்குள்ளும் தங்கள் வாழ்க்கையைப் பற்றி எக்கச்சக்கமான கனவுகள், கற்பனைகள் இருக்கும். அந்தக் கனவுகளுக்குத் தீனி போட இருக்கவே இருக்கிறது திரைப்படங்கள். திரைகளில் வரும் ஹீரோ-ஹீரோயின் என்ன உடை அணிந்து வருகிறார்களோ, எந்த லொக்கேஷனில் அவர்கள் ஆடிப் பாடுகிறார்களோ, அதே மாதிரியான உடை, அதே இடமென ஆசைகளை தங்கள் வாழ்க்கையில் செய்து பார்த்துவிட இன்றைய இளம் தலைமுறையினர் ரொம்பவே மெனக்கெடுகிறார்கள்.
தன்னைக் கரம் பற்றப்போகும் இணையோடு அதே உடையில் அதே இடத்தில்… அதே பாடலுக்கு ஆடிப்பாடி அதை பதிவு செய்து திருமண போட்டோ, வீடியோ, ஆல்பங்களை போல நினைவுப் பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள்.
இந்த போட்டோ, வீடியோக்களை நண்பர்களிடம் சமூக வலைத்தளங்கள் வழியாகப் பகிரவும் தொடங்குகிறார்கள். இந்த 'ப்ரீ வெட்டிங்' போட்டோக்களை தனி ஆல்பமாகவும் பாதுகாக்கிறார்கள். அதேபோல, ப்ரீ வெட்டிங் சூட்டிங்கில் எடுக்கப்படும் வீடியோக்களையும் திருமணத்திற்கு முன்பே டிரெண்ட் ஆக்குகிறார்கள். இந்த வீடியோக்கள் 30 செகண்டில் தொடங்கி, இரண்டு முதல் மூன்று நிமிடங்களை தாண்டியும் ஓடுகிறது. சில ஜோடிகளின் வீடியோக்கள் இரண்டு மூன்று லொக்கேஷன்களில், இரண்டு மூன்றுவிதமான வேறுவேறு உடைகளில் வீடியோவாகவும் பதிவு செய்யப்படுகிறது. இவை பத்து பதினைந்து நிமிடங்களை கடந்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
திருமணத்திற்கு கல்யாண மண்டபம், அழைப்பிதழ், உடைகள் இவற்றுக்கு அடுத்தபடியாக இளைஞர் பட்டாளம் அதிகம் கவனம் செலுத்துவது திருமணப் புகைப்பட போட்டோ கிராபி மற்றும் வீடியோகிராபியில் தான். இதில் லேட்டஸ்ட் டிரெண்டாக வலம் வருவது 'சேவ் தி டேட்' வாட்ஸ் ஆப் அழைப்பிதழ்கள்.
இன்விடேஷனுக்கு பதிலாக டீன்-ஏஜ் வயதினரிடையே 'சேவ் தி டேட்' எனும் பெயரில் 'வாட்ஸ் ஆப்' இன்விடேஷன்கள் சமீபத்தில் ரொம்ப பிரபலம். அதிகபட்சம் 30 செகண்டில் இந்த அழைப்பிதழ்களை தயாரிக்கிறார்கள். அதில் தேதியும், இடமும் நண்பர்களின் நினைவுக்காக பகிரப்படும். எல்லாமே டிஜிட்டல் தளத்தில் இருக்கும். சிலர் 'ப்ரீ வெட்டிங்' சூட்டிங்கில் 'கிளிக்' அடித்த புகைப்படங்களை வைத்து தயாரிக்கிறார்கள். சிலர், இதற்கு என பிரத்யேக வீடியோ சூட்டிங் நடத்தி, தயாரிக்கிறார்கள். இதையும் தாண்டி சில ஜோடிகள் தங்களை பிடித்த ஹீரோ-ஹீரோயின் அணிந்திருந்த உடையில், அதே பாடலுக்கு, அதே மாதிரியான இடங்களில், அதே உடையில் படம் பிடித்து அதை 'சேவ் தி டேட்' வீடியோவாக மாற்றி, பகிர்ந்து கொள்கிறார்கள்.
சமந்தா-விஜய் இந்தப் படத்தில் வந்தது மாதிரி... இந்த மாதிரி, அந்த மாதிரி என்றெல்லாம் அவர்களே புதுப்புது 'கான்செப்ட்'களை யோசித்து, பணத்தை செலவழித்து, பயணப்பட்டு, விருப்பப்பட்டு காட்சிகளை பதிவு செய்கிறார்கள். 'சேவ் தி டேட்' டிஜிட்டல் அழைப்பிதழில் வரும் அந்தப் பாடல், அந்த இடம், அந்த உடை என எல்லாவற்றையும் அவர்களாகவே தேர்வு செய்து வருகிறார்கள்.
பெரும்பாலும் கடற்கரை ரிசார்ட், மலைப்பிரதேசம், புதுச்சேரி, சென்னையை ஒட்டிய கடற்கரைகள் என இடங்களைத் தேர்வு செய்து அங்கு படப்பிடிப்பும், 'ப்ரீ வெட்டிங் சூட்டிங்'கும் கோலாகலமாக நடக்கிறது.
மிடில் கிளாஸ் குடும்பங்களின் கதை இது என்றால், வசதி படைத்தவர்களின் கதை கொஞ்சம் வேறுவிதமாக இருக்கும். பணத்தை செலவு செய்வதில் பிரச்சினை இல்லாதவர்கள், இணையதளத்தில் இருந்து உடை, கான்செப்ட் எல்லாவற்றையும் தேர்வு செய்து லொக்கேஷன், தீம் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்கள். சினிமாவில் எப்படி நடிகர், நடிகைகளை இயக்குகிறார்களோ அதே மாதிரி, இளம் ஜோடிகளையும் பிரபல இயக்குனர்கள் இயக்கி, சூட்டிங் நடத்தி முடிப்பார்கள்.
முத்த காட்சிகள், நடன அசைவுகள், தாங்கி பிடிப்பது மாதிரியிலான காட்சிகள்... தேவைப்பட்டால் நடன கலைஞர்களை ஒருங்கிணைத்து நடத்தப்படும் குழு நடனம் ஆகியவை எல்லாம், இந்த ப்ரீ வெட்டிங் சூட்டிங்கில் அரங்கேறும். சில நேரங்களில் ப்ரீ வெட்டிங் படப்பிடிப்பு இரண்டு மூன்று நாட்களைக் கடந்தும் செல்லும். இவர்களை அழகாக புகைப்படம் எடுக்கவும், சிறப்பான தருணங்களை வீடியோவாக பதியவும் 5 முதல் 15 பேர் வரையிலான குழு வேலை செய்யும். அதில் ஒருத்தர் புகைப்படம் எடுத்தால், ஒருவர் வீடியோ, மற்றொருவர் ஹெலிகேம் டிரோன் ஆபரேட்டர், மற்றவர்கள் உதவி-ஒருங்கிணைப்பு என பிரித்து சூட்டிங் பணியை மேற்கொள்கிறார்கள்.
இவை எல்லாமே, திருமணத்திற்கு முன்பாகவே நடந்து முடிந்து விடும் என்பதுதான், 'ஹைலைட்'. ஆம்...! பிள்ளைகளின் ஆசைக்கும், இந்த காலத்து பெற்றோரும் இசைந்து கொடுக்கவே, புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையும் திருமணத்திற்கு முன்பாகவே ஜோடிகளாக மாறிவிடுகிறார்கள். பெரும்பாலும், வீட்டார் நிச்சயிருக்கும் திருமணங்களில்தான், 'ப்ரீ வெட்டிங் சூட்' தடபுடலாக நடக்கிறது. ஏனெனில், இந்த ப்ரீ வெட்டிங் சூட் தருணங்களில், அனுபவங்களில் இருந்து தங்களுடைய ஜோடியின் பண்புகளை திருமணத்திற்கு முன்பே கணித்துவிடுகிறார்கள். அதனால் பெருநகரங்களை சுற்றிய எல்லா திசைகளிலும், 'ப்ரீ வெட்டிங் சூட்'கள் ஜோராக நடந்து வருகிறது.
ஒரே பேக்கேஜ்
இப்போதெல்லாம், திருமண போட்டோ-வீடியோ தயாரிப்பு பேக்கேஜ்களுடன் சேர்த்து, இலவசமாகவே இந்த 'ப்ரீ வெட்டிங் சூட்டிங்'கும் வந்துவிடுகிறது.
அதுவும் ப்ரீ வெட்டிங் சூட் கலாசாரம் அதிகரிக்க மிக முக்கிய காரணம். ப்ரீ வெட்டிங் சூட் மட்டுமல்ல, திருமணம் முடிந்ததும் 'ஹனிமூன் போட்டோ சூட்' நடத்தும் அளவிற்கு இளசுகளின் போட்டோ-வீடியோ மோகம் வளர்ந்துவிட்டது.
சொதப்பல் வீடியோ
ப்ரீ வெட்டிங் சூட்டில் நடந்த சொதப்பல் காட்சிகளை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒளிபரப்பும் பழக்கமும், இப்போது டிரெண்ட் ஆகியிருக்கிறது.
அதாவது, போட்டோ சூட்டிங்கில் இணையை தூக்க முடியாமல் திணறியது, ஜோடியாக நடக்கும்போது தவறி விழுந்தது, கடல் அலையில் போஸ் கொடுக்கும்போது அலையில் சிக்கியது என... சுவாரசியமான தருணங்களை தொகுத்து, திருமண வரவேற்பில் காண கொடுக்கிறார்கள்.