மெட்ரோ ரெயிலில் சிறுவனின் சிந்திக்கவைக்கும் சைக்கிள் பயணம்


மெட்ரோ ரெயிலில் சிறுவனின் சிந்திக்கவைக்கும் சைக்கிள் பயணம்
x

மும்பை போன்ற போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் பயணம் செய்பவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும், சவுகரியமான பயண அனுபவத்தை கொடுக்கும் வகையிலும் மெட்ரோ ரெயில் சேவை அமைந்திருக்கிறது. மேலும் பஸ், ரெயில், மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துவது வாகன எரிபொருள் செலவை மிச்சப்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமைந்திருக்கிறது.

எனினும் பொது போக்குவரத்தை ஒப்பிடும்போது மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகம். அதோடு மெட்ரோ ரெயிலில் இருந்து இறங்கிய பிறகு தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பஸ், ஆட்டோ போன்ற பொது போக்குவரத்தை மீண்டும் நாடும்போது கூடுதல் செலவாகும். இரட்டிப்பு செலவை ஏற்படுத்துவதால் பலரும் மெட்ரோ ரெயில் பயணத்திற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

அவர்களுக்கு மத்தியில் மெட்ரோ ரெயிலில் வழங்கப்படும் வசதிகளை தங்களுக்கு சவுகரியமாக பயன்படுத்திக்கொண்டு பணத்தை மிச்சப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். மும்பையை சேர்ந்த சிறுவன் ஒருவன் அதற்கு உதாரணமாக திகழ்கிறான். அந்த சிறுவன் மெட்ரோ ரெயிலில் தினமும் தனது சைக்கிளுடன் பயணிக்கும் வழக்கத்தை பின்பற்றுகிறான்.

அவன் தனது சைக்கிளை மற்ற பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் மெட்ரோ ரெயிலில் நிறுத்திவிட்டு அருகில் ஹெல்ட்மெட் அணிந்தபடி உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் என்பவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

'' இந்த சிறுவன் மும்பை மெட்ரோவில் தினசரி பயணம் செய்து டியூசனுக்கு செல்கிறான். அவன் தனது சைக்கிளை மெட்ரோ ரெயிலில் எளிதாக நிறுத்தி வைத்திருப்பதை காணலாம். அவன் மெட்ரோ ரெயில் சேவையை மிகவும் சவுகரியமாக அனுபவிக்கிறான். அவனுக்கு என் வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மெட்ரோ ரெயிலில் சைக்கிள் எடுத்து செல்பவர்கள் அதனை நிறுத்துவதற்கு வசதியாக பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நானும் எனது சைக்கிளுடன் பயணம் செய்திருக்கிறேன் என்று மற்றொருவர் பகிர்ந்திருக்கிறார்.

''பயணத்திற்கான சிறந்த வழியாக மெட்ரோ அமைந்திருக்கிறது. இளம் வயதில் சில குழந்தைகள் பொறுப்பற்றவர்களாக, ஹெல்மெட் அணியாமல் இருப்பார்கள். ஆனால் இந்த சிறுவன் சரியான பாதையில் செல்கிறான். மெட்ரோ அதிகாரிகள் சிறுவனின் செயலை பாராட்டி, மற்றவர்களையும் இதேபோல் பயணிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்'' என்று குடியிருப்போர் நல சங்கம் ஒன்று டுவிட் செய்துள்ளது.

''மெட்ரோ ரெயிலில் சைக்கிளை இலவசமாக கொண்டு செல்லலாம். ஆனால் ரெயில் பயணத்துக்கு அதிகம் செலவாகும். எனவே சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக கூடுதலாக ஒரு பெட்டியை சேர்த்து, இன்னும் பலரும் சைக்கிள் ஓட்டுவதற்கு ஊக்குவிக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுபவர்கள் மதிக்கப்பட வேண்டும்'' என்பது மற்றொருவரின் கருத்தாக இருக்கிறது.


Next Story