உயர் ரத்த அழுத்தம் இருந்தால் தவிர்க்க வேண்டியவை
உயர் ரத்த அழுத்தம் இருந்தால், இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில உணவு வகைகளை தவிர்ப்பது அவசியமானது. அத்தகைய உணவுகள் பற்றியும் அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.
நெருப்பில் வேக வைக்கப்படும் இறைச்சிகள்
சுட்டெரியும் நெருப்பில் வேகவைத்து பரிமாறப்படும் கிரில் சிக்கனை விரும்பி உண்ணும் நபரா நீங்கள்? அத்தகைய இறைச்சியை எப்போதாவது உண்ணலாம். ஆனால் அதனை சாப்பிடுவதை தொடர்ந்து வழக்கமாக கொண் டிருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. மாட்டிறைச்சி, மீன் போன்றவற்றை நெருப்பில் வாட்டி உட் கொள்பவர்களும் இத்தகைய பாதிப்புக்கு ஆளாவார்கள் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. அதிக வெப்பநிலையில் இறைச்சியை வேகவைக்கும்போது அதில் இருந்து வெளிப்படும் ரசாயனங்கள் உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகப்படுத்தும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பொரித்த கோழி இறைச்சி
உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருப்பவர்கள் எண்ணெய்யில் பொரித்து எடுக்கப்படும் கோழி இறைச்சியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பொரித்த உணவுகள் உயர் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். அதில் இருக்கும் அதிக கொழுப்பும், சோடியமும் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மினரல் வாட்டர்
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரை பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் ஒரு லிட்டருக்கு 200 மில்லி கிராம் சோடியம் கலந்திருந்தால் அந்த தண்ணீரை அறவே பருகக்கூடாது. அதில் இருக்கும் அதிக உப்பு இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.
பாப்கார்ன்
மக்காச்சோளத்தை பொரித்து தயாரிக்கப்படும் பாப்கார்னில் அதிக கலோரிகள் மற்றும் சோடியம் கலந்திருக்கும். அதனால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் அதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கெட்சப்
துரித உணவுகளுக்கு சுவை சேர்க்கும் கெட்ச் அப் கலவையின் ருசிக்கு ஏமாறாதீர்கள். இது உப்பு மிகுந்த மசாலாப்பொருளாகும். ஒரு தேக்கரண்டி கெட்ச் அப்பில் சுமார் 200 மில்லி கிராம் சோடியம் சேர்ந்திருக்கும். அதனை உண்ணும் உணவில் சேர்க்கும்போது அதில் இருக்கும் உப்பும் கூடுதலாக சேர்ந்து உடலுக்குள் செல்லும். அப்படி அதிக உப்பை உட்கொள்ள நேருவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.
காபி
உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் காபி பருகுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் மிதமான உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் காபி பருகுவது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கச்செய்யும் என்கிறது, ஒரு ஆய்வு. அதிகம் காபி குடிப்பவர்களுக்கு சராசரி நபர்களை விட இதய நோய் ஏற்படுவதற் கான வாய்ப்புகள் 4 மடங்கு அதிகம் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது.
பிரெஞ்ச் பிரை
உருளைக்கிழங்கை பொரித்து தயார் செய்யப்படும் 'பிரெஞ்ச் பிரை' மசாலா பொருளையும் தவிர்க்க வேண்டும். அதில் கலந்திருக்கும் உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதற்கு பதிலாக நீராவியில் சமைத்த காய்கறிகளை கொண்டு சாலட் தயார் செய்து ருசிக்கலாம்.
ஒயின்:
ரெட் ஒயின் பருகுவது இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும் என்ற கருத்து நீண்ட காலமாக முன் வைக்கப்படுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக ஒயின் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துவிடும்.
ஊறுகாய்
ஊறுகாய் வகைகளில் உப்பு அதிகம் சேர்க்கப்படும் என்பதால் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் அதனை தவிர்ப்பது சிறப்பானது. உப்பு குறைவாக சேர்க்கப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிடுவதுதான் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு ஒரே வழியாகும்.
பாலாடைக்கட்டிகள்
பாலாடைக்கட்டிகளில் சோடியம் அதிகம் சேர்ந்திருக்க கூடும். சில பாலாடைக்கட்டிகளில் சோடியத்தின் வீரியம் மிகுதியாக இருக்கும்.
பீட்சா
உயர் ரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் பீட்சாவை அறவே தவிர்க்க வேண்டும். தக்காளி சாஸ், பாலாடைக்கட்டி, பெப்பரோனி உள்ளிட்டவை கலந்த பீட்சா வகைகளில் உப்பும், நிறைவுள்ள கொழுப்பும் நிறைந்திருக்கும். அவை ரத்த அழுத்தத்தை உயர்த்திவிடும்.
இனிப்பு பானங்கள்
சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்பு பானங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்வதோடு ரத்த அழுத்தத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை பானங்களை அதிகம் பருகுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகம். சர்க்கரை பானங்களுக்கு மாற்றாக தண்ணீர் பருகுவது சிறப்பானது.