பிரமாண்ட வெற்றியால் பொறுமை காக்கும் நடிகர்கள்


பிரமாண்ட வெற்றியால் பொறுமை காக்கும் நடிகர்கள்
x

ஒரு நடிகருக்கு வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். ஆனால் தொடர் தோல்வி, நமக்கான இடத்தை இழக்கச் செய்து விடும். அதே நேரம் தொடர் வெற்றிக்குப் பின் வரும் தோல்வியும் கூட வெறுமையை ஏற்படுத்திவிடக்கூடும். ஒரு நடிகரின் படம் சாதாரண வெற்றியைப் பெறும் போது, அந்த நடிகரின் அடுத்த படம் தோல்வியை சந்தித்தாலும் ரசிகர்களின் மனநிலையில் பெரிய தாக்கம் ஏற்படாது.

ஆனால் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் மிகப் பிரமாண்டமான ஒரு வெற்றியை அந்த நடிகர் கொடுத்து விட்டால், அந்த நடிகரிடம் இருந்து அடுத்து அதே அளவுக்கு பிரமாண்டமான வெற்றி படம் வெளியாகாவிட்டாலும், தோல்வியடையாத ஒரு படத்தைத்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில், ரசிகர்களின் மனதில் இருந்த அந்த நடிகரின் பிம்பம் உடைந்து விடும் வாய்ப்பு அதிகம்.

ஒரு பிரமாண்ட வெற்றிக்குப்பின் சம்பந்தப்பட்ட நடிகருக்கு, பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புகள் வரிசை கட்டும். ஆனால் அவற்றின் கதையை கவனிக்காமல், பணம் கிடைக்கிறது என்பதற்காக அவற்றையெல்லாம் ஒப்புக்கொண்டால், 2 மூன்று ஆண்டுகளுக்கு படம் கையில் இருக்கும். ஆனால் அந்தப் படங்கள் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து விட்டால், மீண்டும் சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிப்பது என்பது கடினமாகிவிடும். எனவே ரசிகர்கள் கொடுத்த வெற்றியை தக்கவைக்க, கதைத் தேர்வில் கொஞ்சம் கவனம் செலுத்துவதிலும், அதற்கான சில காலம் காத்திருப்பதிலும் எந்த தவறும் இல்லை.

தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் சம அளவு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இருவரின் நடிப்பும் அந்தப் படத்தில் பேசப்பட்டது. ரூ.550 கோடியில் எடுக்கப்பட்ட அந்தப் படம், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி வெளியாகி உலக அரங்கில் ரூ.1,300 கோடியை வசூல் செய்தது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் உச்சத்தில் வைத்தது.

ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்பு முடிந்து, தொழில்நுட்ப பணிகள் பல மாதம் நடைபெற்றது. அந்த நேரத்தில் ராம்சரண் தன் தந்தையை வைத்து ஒரு படம் தயாரித்தார். 'ஆச்சார்யா' என்ற அந்தப் படத்தில் தானும் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார், ராம்சரண். இந்தப் படம், 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் வெளியான அடுத்த மாதமே வெளியானது. ஆனால் வீரியமில்லாத கதை, அந்தப் படத்தை தோல்விப் படமாக்கியது. ராம்சரணின் தந்தையான சிரஞ்சீவிதான், 'ஆச்சார்யா' படத்தின் நாயகன் என்றாலும், அந்தப் படத்தின் தோல்வி ராம்சரணையும் பாதித்தது என்பதுதான் உண்மை.

அதனால்தான் தன்னுடைய அடுத்த படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக மாற்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த இயக்குனர், தமிழில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர். இவரது இயக்கத்தில் கடந்த 1½ ஆண்டுகளுக்கும் மேலாக 'கேம் சேஞ்சர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ரூ.170 கோடியில் எடுக்கப்படும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல், மேயில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

'ஆச்சார்யா' படத்தின் தோல்வி ராம்சரணை பாதித் ததை கவனித்த ஜூனியர் என்.டி.ஆர்., தன்னுடைய அடுத்த படத்திற்கான கதைத் தேர்வில் மிகவும் கவனம் செலுத்தினார். ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகுவதற்கு முன்பாகவே, அடுத்தது கொரட்டால சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் ஆர்.ஆர்.ஆர். படத்தின் பிரமாண்ட வெற்றியும், கொரட்டால சிவா இயக்கத்தில் வெளியான 'ஆச்சார்யா'வின் தோல்வியும் ஜூனியர் என்.டி.ஆரை யோசிக்க வைத்தது. ஆனாலும் கதை மற்றும் திரைக்கதை வலுவாக இருந்ததால், கொரட்டால சிவா இயக்கத்திலேயே நடிக்க அவர் முடிவு செய்தார்.

'மிர்ச்சி', 'ஸ்ரீமந்துடு', 'ஜனதா கேரேஜ்', 'பரத் அனி நேனு' ஆகிய தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த கொரட்டால சிவாவுக்கு, 'ஆச்சார்யா' திரைப்படம் திருஷ்டி பொட்டு போல் அமைந்து விட்டது. எனவே அடுத்தப் படத்தில் தன்னுடைய வெற்றியைத் தொடரும் கட்டாயம், கொரட்டால சிவாவுக்கும் இருப்பதால் கதை விவாதம் செய்யப்பட்டு, ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தை இரண்டு பாகமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. படத்திற்கு 'தேவரா' என்றும் பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

தன்னுடைய 'கே.ஜி.எப். 1' மற்றும் 'கே.ஜி.எப்.-2' ஆகிய படங்களின் பிரமாண்ட வெற்றியால், தன்னுடைய அடுத்த படத்தின் கதையை நிதானமாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மற்றொரு நடிகர் யாஷ். கே.ஜி.எப். திரைப்படத்தின் இரண்டு பாகங்களுமே தலா ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த காரணத்தால், நடிகர் யாஷ் மீது இந்திய மொழியின் அனைத்து சினிமா ரசிகர்களின் பார்வையும் பதிந்திருக்கிறது. எனவே தன்னுடைய அடுத்தப் படத்தின் கதை இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த 'மை நேம் இஸ் கிராதகா', 'கூக்லி 2' ஆகிய படங்களை கூட தள்ளிவைத்திருக்கிறார்.

கே.ஜி.எப். படத்தின் மூன்றாம் பாகம் வருவது உறுதி என்றாலும், அது எப்போது தயாராகும் என்ற கேள்விக்குறி உள்ளது. அதே நேரம் பாலிவுட்டில் ரன்பீர்கபூர் நடிப்பில் வெளியாக உள்ள 'ராமாயணா' என்ற படத்தில் நடிக்கவும் யாஷிடம் கேட்டிருக்கிறார்கள். இது தவிர மலையாள இயக்குனரான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் யாஷிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார் யாஷ். அந்த காலதாமதத்திற்கு, அடுத்தப் படம் வலுவான கதையம்சத்துடன், ரசிகர்கள் விரும்பும் வகையில் வெளியாக வேண்டும் என்பதே காரணம்.


Next Story