பூமியை மிரள வைக்கும் 8 ஆழமான இடங்கள்


பூமியை மிரள வைக்கும் 8 ஆழமான இடங்கள்
x

பூமியின் மேற்பரப்பில் நாம் வியந்து பார்க்கக்கூடிய கட்டமைப்புகள் ஏராளம் உள்ளன. உயரமான மலைகள், அங்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அழகிய இடங்கள், பிரமிப்பூட்டும் பாறைகள், இயற்கையோடு போட்டிப்போடும் வகையில் செயற்கையாக உருவாக்கிய பிரமாண்டங்கள் என பட்டியல் நீண்டு கொண்டிருக்கும். பூமிக்கு கீழும் மிரள வைக்கும் இடங்கள் பல உள்ளன. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு...

1. வுடிங்டீன் கிணறு: 392 மீட்டர்

இது இங்கிலாந்தின் புறநகர் பகுதியான பிரைக்டான் அருகிலுள்ள கிழக்கு சசெக்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது. 1858-1862-க்கு இடைபட்ட காலத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்த சிறை கைதிகளால் இந்த கிணறு தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதான் உலகிலேயே கையால் தோண்டப்பட்ட மிக ஆழமான கிணறாக அறியப்படுகிறது. 392 மீட்டர் நீளத்திற்கு பூமிக்குள் நீண்டு செல்லும் இந்த கிணறை ஆராய்ச்சி செய்யச் சென்ற பலர் உயிரிழந்துள்ளனர்.

2. வெர்டிகோ குகை: 603 மீட்டர்

ஸ்லோவேனியாவில் உள்ள இந்த குகையை ஸ்லோவேனியா-இத்தாலியை சேர்ந்த குகை ஆராய்ச்சியாளர்கள் 1996-ம் ஆண்டு கண்டுபிடித்தனர். இந்த குகைக்குள்ளும் மிக ஆழமான கிணறு அமைக்கப்பட்டிருக்கிறது. அது 603 மீட்டர் ஆழத்திற்கு கீழே செல்கிறது.

3. பிங்காம் கனியன் குவாரி: 970 மீட்டர்

அமெரிக்காவின் உட்டா பகுதியில் அமைந்துள்ள இந்த குவாரி மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய, அடுக்கடுக்கான பள்ளங்களை கொண்ட இடமாக அறியப்படுகிறது. 970 மீட்டர் ஆழம் கொண்ட இதன் அடிப்பகுதிக்கு செல்வது சவாலானது.

கடல் மட்டத்தில் இருந்து 828 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக மிளிரும் உலகின் உயரமான கட்டிடமான பூர்ஜ் கலிபா முழுவதும் இந்த குவாரிக்குள் அடங்கிவிடும். அந்த அளவுக்கு விசாலமான ஆழத்தையும் கொண்டது.

4. பைக்கால் ஏரி: 1,642 மீட்டர்

ரஷியாவில் அமைந்துள்ள இந்த ஏரிதான் பூமியில் அமைந்துள்ள மிக ஆழமான ஏரியாக கருதப்படுகிறது. இதன் ஆழம் தோராயமாக 1,642 மீட்டர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஏரியின் முழு ஆழத்தை அளவிட முடியாத அளவிற்கு பூமிக்குள் அதன் நீட்சி விரிந்திருக்கிறது.

5. கிருபேரா குகை: 2,250 மீட்டர்

இது வெரியோவ்கினா குகை என்றும் அழைக்கப்படுகிறது. ஜார்ஜியாவில் அமைந்துள்ள இதுதான் உலகிலேயே மிக ஆழமாக குகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் கண்டு பிடித்த வரையில் பூமிக்குள் 2 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான ஆழத்திற்கு செல்லும் ஒரே குகை இதுவாகத்தான் இருக்கிறது.

6. டவ்-டோனா சுரங்கங்கள்: 4,500 மீட்டர்

உலகின் மிக ஆழமான சுரங்கங்கள் தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ளன. அவை 4,500 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ளன. சுரங்க தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தில் எப்படி வேலை செய்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அந்த அளவிற்கு ஆபத்தான கட்டமைப்புகளை கொண்டிருக்கிறது. பூமிக்குள் ஆழமான இடத்தில் அமைந்திருந்தாலும் இங்கு சராசரியாக 50-60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். இவ்வளவு சிரமப்பட்டு சுரங்க தொழிலாளர்கள் அங்கு தேடுவது எதை தெரியுமா? தங்கத்தைத்தான்.

7. மில்வாக்கி: 8,740 மீட்டர்

போர்ட்டோ ரிக்கோ மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அகழியின் ஆழமான மையப்புள்ளியாக இது அமைந்துள்ளது. புவியியலாளர்களின் கூற்றுப்படி, இந்த இடத்தில் இருந்து எரிமலை வெடிப்பு விரைவில் உருவாகலாம். மேலும் வலுவான சுனாமி உருவாகி நிறைய பேர் கொல்லப்படலாம் என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

8. மரியானா அகழி: 10,994 மீட்டர்

உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் இதுவாகும். 10,984 மீட்டர்கள் ஆழம் கொண்ட இப்பகுதி, வடக்குப் பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்கு தெற்கிலும், குவாமுக்கு அருகிலும் அமைந்துள்ளது. 2011 அளவீடுகளின்படி, கடல் மட்டத்திற்கு கீழே 10,994 மீட்டர் வரை செல்கிறது.

இந்த அகழியில் மிக உயரமான மலையான எவரெஸ்ட்டைப் போட்டால் கூட இன்னும் இடம் இருக்கும்.


Next Story